Published : 18 Jan 2020 07:22 AM
Last Updated : 18 Jan 2020 07:22 AM

திருமணமான பெண்ணின் தாய் சட்டப்பூர்வ வாரிசு இல்லை: உயர் நீதிமன்றம்

சென்னை அமைந்தகரையை சேர்ந்தவர் பிவிஆர் கிருஷ்ணா. இவரது மனைவி விஜயநாகலட்சுமி கடந்த 2013-ல் இறந்துவிட்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், விஜயநாகலட்சுமியின் சட்டப்பூர்வமான வாரிசு சான்றிதழில், அவரது தாய் சேகரியின் பெயரும் சேர்க்கப்பட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் கிருஷ்ணா முறையிட்டார். ஆனால், எந்த பலனும் இல்லாததால், இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு இந்த மனு மீதான விசாரணை நடந்தது.

‘இந்து வாரிசுரிமை சட்டப்படி, திருமணமான ஆண் இறந்துவிட்டால் அவரது மனைவி, குழந்தைகள் மட்டுமின்றி அவரது தாயும் சட்டப்பூர்வ வாரிசுகளாக கருதப்படுவார்கள். அதேபோலத்தான் திருமணமான பெண் இறந்துவிட்டதால் அவரது தாயும் வாரிசாக கருதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது’ என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, ‘‘இந்து வாரிசுரிமை சட்டப்படி, திருமணமான ஆண் இறந்தால் மட்டுமே அவரது தாயாரும் வாரிசாக கருதப்படுவார். ஆனால், திருமணமான பெண் இறந்துவிட்டால் அவரது கணவர், குழந்தைகள் மட்டுமே சட்டப்பூர்வமான வாரிசுகளாக முடியும். இறந்த பெண்ணின் தாய், தந்தை வாரிசு ஆக முடியாது’’ என்று உத்தரவிட்டார்.

மேலும், விஜயநாகலட்சுமியின் தாயை வாரிசு என்று குறிப்பிட்டு ஏற்கெனவே வழங்கப்பட்ட வாரிசு சான்றிதழை ரத்து செய்த நீதிபதி, விஜயநாகலட்சுமியின் கணவர், குழந்தை பெயர் மட்டுமே கொண்ட புதிய வாரிசு சான்றிதழை பிப்ரவரி 15-க்குள் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x