Published : 17 Jan 2020 10:36 PM
Last Updated : 17 Jan 2020 10:36 PM

மக்கள் தொகை பதிவேடு பணிகளை நிறுத்திவையுங்கள்: தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்

ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைபெறுவதாக உள்ள மக்கள் தொகை பதிவேடு பணிகளை (NPR) நிறுத்திவைக்க வேண்டுமெனவும், இப்பணிகளை மேற்கொள்ள ஊழியர்களை நியமனம் செய்வதற்காக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று விடுத்துள்ள அறிக்கை:

“மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) ஆகிய இரண்டையும் இணைத்து ஒரேநேரத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனைக்குழு கூட்டத்தை மத்திய அரசு இன்று டெல்லியில் நடத்தியுள்ளது.

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்பட்டு வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பும், தற்போது நடைமுறைக்கு வந்துள்ள தேசிய மக்கள் தொகை பதிவேடும் ஒன்றல்ல. சென்சஸ் சட்டம் 1948-ல் கொண்டு வந்த சட்டம். இது மக்களுக்கான நல்வாழ்வு திட்டங்களை உருவாக்க தேவையான புள்ளி விவரங்களை தருகிறது.

தற்போது ‘ஆதார் ’அட்டையும் இத்தகைய பயன்பாட்டுக்கு உதவுகிறது. ஆனால், மக்கள் தொகை பதிவேடு அப்படிப்பட்டதல்ல. குடியுரிமை சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது என்பது ஆழ்ந்து கவனிக்கத்தக்கதாகும். இவ்வாறு செய்வதன் மூலம், ஒவ்வொருவரும் தான் இந்திய குடிமகன் என்பதற்கான தன்னுடைய வாழ்வாதாரத்திற்கான ஆதாரங்களை சமர்ப்பிப்பதை கட்டாயப்படுத்துகிறது. இதனால் சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் மக்கள் தொகை பதிவேடு ஆகிய இரண்டும் இருவேறு நோக்கங்கள் கொண்டவை. இவை இரண்டையும் இணைத்து 2020, ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிடுவது மக்களை கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும். இவற்றை இந்திய குடிமக்கள் எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே, இவ்வாண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைபெறுவதாக உள்ள மக்கள் தொகை பதிவேடு பணிகளை (சூஞசு) நிறுத்திவைக்க வேண்டுமெனவும், இப்பணிகளை மேற்கொள்ள ஊழியர்களை நியமனம் செய்வதற்காக அரசு வெளியிட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டுமெனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது”.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x