

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயல் மஞ்சுவிரட்டில் ஆயிரம் காளைகள் பங்கேற்றன. இதில் 82 பேர் காயமடைந்தனர்.
புகழ்பெற்ற சிராவயல் மஞ்சுவிரட்டையொட்டி காலை 11.30 மணிக்கு, அக்கிராமத்தில் பெரியநாயகி அம்மன், தேனாட்சி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து கிராமமக்கள் மேளதாளத்துடன் மஞ்சுவிரட்டு தொழுவிற்கு வந்தனர். தொழுவில் இருந்த மாடுகளுக்கு வேஷ்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்தனர்.
கோயில் காளைகள் அவிழ்த்துவிட்டதும் மஞ்சுவிரட்டு தொடங்கியது. காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. தொழுவில் இருந்து 101 காளைகள் மட்டும் அவிழ்க்கப்பட்டன. 61 மாடு பிடிவீரர்கள் பங்கற்றனர். மாடுகளை பிடித்த வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்கக்காசு, அண்டா, குத்துவிளக்கு போன்றவை பரிசாக வழங்கபட்டன.
முன்னதாக சிராயவல் பொட்டல், கம்பனூர் பரணி கண்மாய், கும்மங்குடி பொட்டல் ஆகிய இடங்களில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, காரைக்குடி, திருப்பத்தூர், அறந்தாங்கி திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
மாடுகள் முட்டியதில் 82 பேர் காயமடைந்தனர். முப்பது பேர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையிலும், 14 பேர் சிவகங்கை அரசு மருத்துவமனையிலும், மற்றவர்கள் மஞ்சுவிரட்டு பொட்டலில் உள்ள மருத்துவ முகாமிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மஞ்சுவிரட்டு விழாவில் எம்பி கார்த்திசிதம்பரம், எம்எல்ஏ கேஆர்.பெரியகருப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, வட்டாட்சியர் ஜெயலெட்சுமி, ஊர் அம்பலக்காரர் வேலுச்சாமி உட்பட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மஞ்சுவிரட்டை காண வெளிமாநிலத்தினர், வெளிநாட்டினரும் வந்திருனர். எஸ்பி ரோஹித்நாதன் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மஞ்சுவிரட்டு காண்பதற்காக ஏராளமானோர் வாகனங்களில் வந்ததால் திருப்பத்தூரில் இருந்து பிள்ளையார்பட்டி வரை காலை 8 மணி முதல் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.