Last Updated : 17 Jan, 2020 06:05 PM

 

Published : 17 Jan 2020 06:05 PM
Last Updated : 17 Jan 2020 06:05 PM

புதுச்சேரியில் திருக்குறள் மணிக்கூண்டு; மணிக்கொரு முறை குறள், விளக்க உரையுடன் ஒலிக்கும் 

புதுச்சேரி 

புதுச்சேரியில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்ட பழமையான மணிக்கூண்டு, நேரத்தை அறிவிப்பதுடன், மணிக்கு ஒரு முறை திருக்குறள் வாசித்தும் அசத்துவது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

வாழ்வில் நெறிகளைச் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் திருக்குறளுக்கு நிகரில்லை. ‘ஒன்றே முக்கால் அடியிலே உலகம் தன்னைக் கவருமாம்’ என்று பெருமையாகக் கூறப்படும் திருக்குறளில் உலக மக்கள் அனைவருக்கும் தேவையான கருத்துகள் பொதிந்துள்ளன.

இந்த திருக்குறளை மக்கள் எளிதாக மனதில் நிறுத்திக்கொள்ளும் வகையில் தினமும் ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை மணி அடிப்பதுடன், திருக்குறள், அதற்கான விளக்க உரையுடன் ஒலிக்கிறது புதுச்சேரியில் அமைந்துள்ள ஒரு மணிக்கூண்டு. அதற்காக 1,330 திருக்குறளும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

புதுச்சேரி, முத்தியால்பேட்டை காந்தி வீதியில் உள்ள இந்த பழமையான மணிக்கூண்டும், அங்குள்ள கிளமென்சோ பூங்காவும், முறையான பராமரிப்பின்றி பழுதானது. மணிக்கூண்டினை பழமை மாறாமல் புதுப்பித்து, பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். தொகுதி எம்எல்ஏ வையாபுரி மணிகண்டனும் அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தினார்.

இப்பணிக்கு, அவரது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 20 லட்சத்தை ஒதுக்கிக் கொடுத்தார். அதையடுத்து, மணிக்கூண்டை சீரமைத்தல், வண்ணம் பூசுதல், புதிதாக கடிகாரம் பொருத்துதல், அங்குள்ள கிளமென்சோ பூங்காவைச் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் புதுச்சேரி நகராட்சி சார்பில் கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்டன.

இதில், மணிக்கூண்டு, பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுப்பிக்கப்பட்ட மணிக்கூண்டு ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை சப்தம் எழுப்புவதோடு, நேரத்தை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், திருக்குறளை அனைத்து மக்களும் அறிந்து கொள்ளவும், எளிதாக மனதில் நிறுத்திக்கொள்ளும் வகையில் ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை மணி அடித்து முடிந்ததும்,
ஒரு திருக்குறள், அதற்கான விளக்க உரையுடன் ஒலிக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக 1330 திருக்குறளும், பதிவேற்றம் செய்து வைக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதுச்சேரியில் மேற்கொள்ளப்பட்ட இந்த திருக்குறள் ஒலிக்கும் மணிக்கூண்டு பொதுமக்கள் மற்றும் இன்றி சுற்றுலாப் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

சீரமைக்கப்பட்ட மணிக்கூண்டு, கிளமன்சோ பூங்காவை, வையாபுரி மணிகண்டன் எம்எல்ஏ கடந்த 15-ம் தேதி திறந்து வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார். உள்ளாட்சித் துறை இயக்குநர் மலர்கண்ணன், நகராட்சி ஆணையர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x