

கொடைக்கானலில் வெளிநாட்டு சுற்றுலாபயணிகள் பங்கேற்ற சுற்றுலா பொங்கல் விழா இன்று சுற்றுலாத்துறை சார்பில் கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் சுற்றுலாபயணிகள் வருகை தருகின்றனர். குளிர் காலமான டிசம்பர், ஜனவரி மாதங்களில் அதிகளவில் வெளிநாட்டு சுற்றுலாபயணிகள் கொடைக்கானல் வருகின்றனர்.
தமிழக பாரம்பரியத்தை வெளிநாட்டினருக்கு எடுத்துக்கூறும் வகையில் ஆண்டுதோறும் சுற்றுலாத்துறை சார்பில் வெளிநாட்டினவர் பங்கேற்கும் சுற்றுலாபொங்கல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
கொடைக்கானலில் உள்ள வட்டக்கானல் பகுதியில் இன்று சுற்றுலா பொங்கல் விழா நடைபெற்றது. கொடைக்கானல் கோட்டாட்சியர் சுரேந்திரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொங்கல் விழா கொண்டாடுவதற்கான காரணங்கள் குறித்து வெளிநாட்டவருக்கு எடுத்துரைத்தார்.
திண்டுக்கல் மாவட்ட சுற்றுலா அலுவலர்(பொறுப்பு) பாலமுருகன் முன்னிலை வகித்தார். உதவி சுற்றுலா அலுவலர் ஆனந்தன் வரவேற்றார். முன்னதாக மேளதாளத்துடன் மாலைகள் அணிவித்து வெளிநாட்டு சுற்றுலாபயணிகள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.
நிகழ்ச்சியில் ஜெர்மனி, பிரான்ஸ், இஸ்ரேல், அமெரிக்க உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலாபயணிகள் கலந்துகொண்டனர்.
சிலம்பாட்டம், புலியாட்டம், பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து பொங்கல் வைத்தனர். வெளிநாட்டு பயணிகள், பொதுமக்கள் பங்கேற்ற விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது. இன்ஸ்பெக்டர் ராஜசேகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.