திமுக - காங்கிரஸ் உறவு முறியும் என முன்பே தெரிவித்திருந்தேன்; தற்போது அது நடக்கிறது: கமல் பேட்டி

திமுக - காங்கிரஸ் உறவு முறியும் என முன்பே தெரிவித்திருந்தேன்; தற்போது அது நடக்கிறது: கமல் பேட்டி
Updated on
1 min read

திமுகவும் காங்கிரஸும் தங்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுப் பிரிவார்கள் என தாம் முன்பு கூறியதே தற்போது நடக்கிறது என மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமல் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிப் பிரச்சினையில் கோபமுற்ற கே.எஸ். அழகிரி, கே.ஆர்.ராமசாமி இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அதில் திமுக கூட்டணி தர்மத்தை மதிக்கவில்லை என காட்டமாகத் தெரிவித்திருந்தனர். இது திமுக தலைமையை கோபத்தில் ஆழ்த்தியது. டெல்லியில் காங்கிரஸ் கூட்டிய சிஏஏ எதிர்ப்புக் கூட்டத்தை திமுக புறக்கணித்தது. இதற்கு திமுக அழகிரி அறிக்கையைக் காரணம் காட்டி டெல்லி தலைவர்களிடம் தெரிவித்தது.

பின்னர் சென்னை வந்த டி.ஆர்.பாலு, திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்பதைக் காலம்தான் பதில் சொல்லும் எனப் பேட்டி அளித்தார். கூட்டணியில் எந்தப் பிரச்சினையும் இல்லை என காங்கிரஸ் தரப்பில் கே.எஸ்.அழகிரி பேட்டி அளித்தார். காங்கிரஸ் போக விரும்பினால் போகட்டும் என்று துரைமுருகன் பேட்டி அளித்தார்.

நேற்று துரைமுருகன் அளித்த பேட்டியில், காங்கிரஸுக்கு வாக்கு வங்கி இல்லை எனப் பேட்டி அளித்திருந்தார். இது திமுக- காங்கிரஸ் கூட்டணி குறித்து சர்ச்சையை எழுப்பியுள்ளது. சீமான், அமைச்சர் ஜெயக்குமார் போன்றோரும் இப்பிரச்சினையில் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்த மக்கள் நீதி மய்ய நிறுவனர் கமல்ஹாசன் தாம் முன்பே இதைச் சொன்னேன் எனத் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று கமல் செய்தியாளர்களைச் சந்தித்தார். திமுக- காங்கிரஸ் தலைவர்கள் மாறி மாறி தங்களுக்குள் பேட்டி அளிப்பதும், கூட்டணி பற்றிப் பேசுவதும் கூட்டணிக்குள் பிளவு ஏற்படும்போல் தெரிகிறதே எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு கமல் பதில் அளிக்கையில், ‘‘திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்படும் என்று ஏற்கெனவே நான் தெரிவித்திருந்தேன். அதுதான் நடந்தது'' எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in