Published : 17 Jan 2020 04:10 PM
Last Updated : 17 Jan 2020 04:10 PM

ஜல்லிக்கட்டு காளைக்கு தோட்டத்தில் சமாதி: 15 ஆண்டுகளாக நீங்காத நினைவுகளோடு வாழும் வத்தலகுண்டு விவசாயி

வத்தலகுண்டில் ஜல்லிக்கட்டு காளையின் நினைவால் வாழும் 90 வயது முதியவர், காளைக்கு சமாதி கட்டி வழிபட்டு வருகிறார்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு வடக்கு தெருவை சேர்ந்தவர் இடமலையான்(90). விவசாயியான இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வளர்த்துவந்துள்ளார்.

இதற்கு மாயாவு என்றும் பெயரிட்டுள்ளார். ஜல்லிக்கட்டு காளையை தனது குடும்பத்தில் ஒருவராக நினைத்து வளர்த்துவந்துள்ளார். மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் தான் வளர்த்த காளையை பங்கேற்க செய்துள்ளார்.

பார்ப்பதற்கு முரட்டுக்காளையாக இருந்தாலும், விவசாயி இடமலையான் சொல்லுக்கு கட்டுப்படும் காளையாகவே மாயாவு இருந்துள்ளது. இதனால் இடமலையான் தான் வளர்த்த ஜல்லிக்கட்டு காளை மீது அதிகம் பாசம் வைத்திருந்தார்.

போட்டிகளில் பல பரிசுகளை வென்ற மாயாவு காளை, 15 வருடங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டது. இதனால் துக்கத்தில் ஆழ்ந்த இடமலையான் தனது சொந்த தோட்டத்திலேயே காளையை அடக்கம் செய்தார்.

காளை இறந்து 15 வருடங்கள் கடந்தபோதும் அதன் நினைவாகவே இன்றும் உள்ளார் இடமலையான். ஆண்டுதோறும் பொங்கல் அன்று காளையின் சமாதிக்கு வெள்ளையடித்து பழங்கள் வைத்து பத்தி ஏற்றி வழிபட்டுவருகிறார்.

இவரோடு, இவரது மகன்கள், பேரப்பிள்ளைகளும் இறந்த காளைக்கு வருடந்தோறும் அஞ்சலி செலுத்துகின்றனர். மாயாவு காளை இறந்தபிறகு இடமலையான் வேறு எந்த காளையையும் வளர்க்கவில்லை.

தான் வளர்த்த காளையின் மீது 15 வருடங்கள் கடந்தும் இன்றளவும் விவசாயி இடமலையான் வைத்துள்ள பாசம் அப்பகுதி மக்களின் மனம் நெகிழச்செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x