Published : 17 Jan 2020 01:41 PM
Last Updated : 17 Jan 2020 01:41 PM

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளை முட்டி ஒருவர் பலி: காளையை அழைத்துவந்தவருக்கு நேர்ந்த சோகம்

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்குபெறுவதற்காக காளையை அழைத்து வந்த நபரை மற்றொரு காலை முட்டியதில் அந்த நபர் பலியானார்.

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (ஜன.17) காலை 8.35 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 700 காளைகளும் 855 வீரர்களும் களம் கண்டு வரும் சூழலில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது விறுவிறுப்புக்கு இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை சோழவந்தான் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க தனது காளையை அழைத்து வந்திருந்தார். களம் கண்டு வெளியேறிய தனது காளையைப் பிடிக்க காளைகள் வெளியேறும் இடத்தில் நின்றிருந்தார் ஸ்ரீதர். அவரது காளையும் வந்ததது. காளையின் கழுத்தில் கயிறு கட்டி இழுத்துச் செல்ல முற்பட்டார். அப்போது ,எதிர்பாராத விதமாக திடீரென அந்த வழியில் சென்ற மற்றொரு காளை மாடு ஸ்ரீதர் மீது பலமாக முட்டியது. இதில் ஸ்ரீதரின் வலது பக்க வயிற்றில் காயம் ஏற்பட்டது.

உடனே மீட்கப்பட்ட அவருக்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பி.இ சிவில் பட்டதாரியான இவர் சட்டக் கல்லூரியில் சேர விண்ணப்பித்திருந்தார்.

22 பேர் காயம்:

இன்று காலை தொடங்கி இதுவரை நடந்த போட்டியில் 22 வீரர்கள் காயமடைந்தனர். அவர்களில் 8 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

லேசான காயங்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை வழங்கும் விதமாக அலங்காநல்லூரிலேயே மருத்துவக் குழுவும் செயல்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x