Published : 04 Aug 2015 08:44 AM
Last Updated : 04 Aug 2015 08:44 AM

அரசியல் ஆதாயத்துக்காகவே எதிர்க்கட்சிகள் மதுவிலக்கு போராட்டத்தை நடத்துகின்றன: அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் குற்றச்சாட்டு

மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த 4 ஆண்டு அதிமுக அரசின் சாதனைகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் மதுவிலக்கு என்ற ஆயுதத்தை அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன.

மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என கூறும் இதே தலைவர்கள்தான் உடனடியாக அமல்படுத்த முடியாது என்றும் சொல்கின்றனர். இதன் மூலம் முழு அடைப்பு என்பது மதுவிலக்குக்காக அல்ல என்பது தெளிவாகிறது.

கன்னியாகுமரியில் மதுக்கடையை அகற்ற கோரி சசிபெருமாள் செல்பேசி கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார்.

7 நாட்களில் கடை அகற்றப்படும் என டாஸ்மாக் மேலாளர் உத்தரவாதம் அளித்தார். அதை தொடர்ந்து சசிபெருமாளை மீட்க கோபுரத்தின் உச்சிக்கு சென்றபோது அவர் நினைவில்லாமல் இருந்தது தெரியவந்தது.

அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரின் மரணம் வேதனை அளிக்கிறது. தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டுவது காந்திய வழி அல்ல. சசிபெருமாளின் இறப்பை வைத்து அரசியல் நடத்துவது கண்டனத்துக்குரியது.

திமுகவைச் சேர்ந்த 5 நபர்களுக்கு மது ஆலை நடத்த அனுமதி வழங்கிய கருணாநிதிக்கு மதுவிலக்கு பற்றி பேச தகுதி கிடையாது.

ஆகஸ்ட் 1-ம் தேதி கலிங்கப்பட்டியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற மதிமுக பொதுச் செயலர் வைகோவின் தாயார் 2-ம் தேதி போராட்டத்தில் பங்கேற்கவில்லை. இதிலிருந்து அங்கு நடந்த கலவரம் திட்ட மிட்டு நடத்தப்பட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. வழிபாட்டுத்தலங்கள், பள்ளி, கல்லூரிகள் அருகில் மதுபான கடைகள் இருப்பதாக கூறுவது தவறானது. தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த 504 கடைகள் அகற்றப்பட்டுள்ளன. அதிமுக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த எதுவும் இல்லை என்பதால் மதுவிலக்கை கையில் எடுத்துள்ளனர். இவர்களின் எண்ணம் ஒரு போதும் ஈடேறாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x