

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஆட்சியர் டி.ஜி.வினய், வருவாய் துறை அதிகாரிகள் ஆகியோர் ஜல்லிக்கட்டு விழாவை பார்வையிட்டு வருகின்றனர்.
போட்டியை ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழு நடத்துகிறது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 700 காளைகள் களமிறக்கப்படுகின்றன. களத்தில் 855 மாடுபிடி வீரர்கள் உள்ளனர். போட்டி தொடங்கும் முன்னர் காளைகளுக்கும், வீரர்களுக்கும் தனித்தனியே உடற்பரிசோதனை நடைபெற்றது. பின்னர் வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து முதலில் மூன்று கோயில் காளைகளும், ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்கள் சார்பில் ஒரு காளையும் அவிழ்த்துவிடப்பட்டன.
இன்றைய போட்டியில் வாகைசூடும் மாடுபிடி வீரர்களுக்கும் காளைகளுக்கும் கார்கள், பைக் உட்பட ரூ.2 கோடி மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படுகின்றன.
தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன், மதுரை எஸ்.பி.மணிவண்ணன், மதுரை சரக டிஐஜி ஆனி விஜயா ஆகியோர் தலைமையில் 3,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடையும் வீரர்களுக்கு சிகிச்சை வழங்க தயார் நிலையில் மருத்துவக் குழு உள்ளது.
சிறந்த மாடுபிடி வீரர், சிறந்த காளைக்கு முதல்வர், துணை முதல்வர் சார்பில் கார் பரிசாக வழங்கப்படுகிறது.
வீரர்களிடம் சிக்காத அமைச்சரின் காளைகள்..
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டில் சுகாதார துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் மூன்று காளைகள் களமிறக்கப்பட்டன. கருப்பு கொம்பன், வெள்ளைக் கொம்பன், சின்னக் கொம்பன் ஆகிய அந்த மூன்று காளைகளையும் எந்த ஒரு மாடுபிடி வீரராலும் தழுவ இயலவில்லை. சின்னக் கொம்பன் காளை முட்டி 5 வீரர்கள் காயமடைந்தனர்.
அமைச்சருடன் சின்னக்கொம்பன் காளை
அதேபோல், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட ராவணன் என்பவரின் காளையையும் எந்த வீரராலும் பிடிக்க இயலவில்லை. ராவணனின் காளை களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடியது பார்வையாளர்களை வசீகரிப்பதாக அமைந்தது.
இலங்கையைச் சேர்ந்த செந்தில் தொண்டைமானின் காளைகளும் களமிறக்கப்பட்டன.
உலகச் சுற்றுலாப் பயணிகள் கேலரி..
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன், டென்மார்க் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அவர்கள் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காணும் வகையில் உலகச் சுற்றுலாப் பயணிகள் கேலரி அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமர்ந்து போட்டியைக் காண வெளிநாட்டுப் பயணிகள் சுமார் ரூ.3000 முதல் ரூ.5000 வரை டிக்கெட் பெற்றுள்ளனர். ஆனாலும், அந்த கேலரியில் உள்ளூர் அரசியல் பிரமுகர்களின் குடும்பத்தினர், அதிகாரிகள் குடும்பத்தினர் அமர்ந்ததால் 10 மணிக்கு மேல்தான் வெளிநாட்டுப் பயணிகளால் அங்கு அமர முடிந்தது.
திடீர் பரிசுகளால் திக்குமுக்காடும் வீரர்கள்..
ஒவ்வொரு காளைக்கும் ஏற்கெனவே 11 விதமான பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய போட்டியின் போது ஒரு சில காளைகளுக்கு களத்தில் இறக்கப்படுவதற்கு முன்னதாக 2 பவுன் தங்கச் சங்கிலி உள்ளிட்ட விலையுயர்ந்த பரிசுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் வீரர்கள் இடையே அந்த மாடுகளைப் பிடிக்க கடும் போட்டி நிலவியது.
ஒவ்வொரு சுற்றுக்கும் தலா 75 வீரர்கள் வீதத்தில் களமிறக்கப்படுகின்றனர். இதுவரை 15 வீரர்கள் காயமடைந்தனர்.
ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண தேனி நாடாளுமன்ற எம்.பி. ரவீந்திரநாத் குமார் வந்துள்ளார்.