Published : 17 Jan 2020 08:39 AM
Last Updated : 17 Jan 2020 08:39 AM

வாக்கு வங்கி இல்லாத கட்சி என்பதா?- துரைமுருகனுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்: கூட்டணியில் மோதல் முற்றுகிறது

வாக்கு வங்கி இல்லாத கட்சி என்ற திமுக பொருளாளர் துரைமுருகனின் பேச்சுக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் திமுக – காங்கிரஸ் இடையே மோதல் வலுத்து வருகிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் பதவிகளை பகிர்ந்து கொள்வதில் திமுக - காங்கிரஸ் இடையே சிக்கல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் திமுகவின் செயல்பாடுகள் கூட்டணி தர்மத்துக்கு புறம்பானது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் கடந்த 10-ம் தேதி கூட்டறிக்கை வெளியிட்டிருந்தனர். இதனால் கோபமடைந்த திமுக, கடந்த 13-ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தது.

இதுதொடர்பாக விளக்கம் அளித்த திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, ‘‘கூட்டணி தர்மத்தை திமுக மீறிவிட்டதாக தமிழககாங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கே.ஆர்.ராமசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டிருப்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான குற்றச்சாட்டாகவே நாங்கள் பார்க்கிறோம். எனவே, காங்கிரஸ் தலைமையில் டெல்லியில் நடந்த கூட்டத்தை புறக்கணித்தோம். திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்’’ என்றார்.

அதைத் தொடர்ந்து கடந்த 14-ம் தேதி கே.எஸ்.அழகிரியை நேரில் அழைத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக - காங்கிரஸ் மோதல் தொடர்பான விவரங்களைக் கேட்டறிந்தார். இந்தச் சந்திப்பு முடிந்ததும் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, ‘‘திமுகவும், காங்கிரஸும் இணைந்த கரங்கள். இந்தக் கூட்டணி பிரிய வாய்ப்பே இல்லை’’ என்றார்.

ஆனாலும் திமுக தரப்பில் இதை விடுவதாக இல்லை. நேற்றுமுன்தினம் வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்ற திமுக பொருளாளர் துரைமுருகன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘‘திமுக கூட்டணியில் இருந்து காங்கிரல் விலகிச் சொன்றால் கவலையில்லை. அதனால் திமுகவுக்கு எந்த நஷ்டமும் இல்லை. காங்கிரஸுக்கு வாக்கு வங்கி இருந்தால்தானே அவர்கள் விலகுவது பற்றி கவலைப்பட வேண்டும். திமுக - காங்கிரஸ் கூட்டணி பற்றி காலம்தான் பதில் சொல்லும். ஆனால், நான் இப்போதே கூறிவிட்டேன்’’ என்றார்.

இது காங்கிரஸ் கட்சியினரை கொந்தளிக்கச் செய்துள்ளது. காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும் சமூக ஊடகங்களில் துரைமுருகனுக்கு எதிராகவும், திமுகவுக்கு எதிராகவும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதற்குதிமுக தரப்பிலும் எதிர்ப்பு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவில், ‘காங்கிரஸுக்கு வாக்கு வங்கி இல்லை என்ற ஞானம் வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலுக்கு முன்பு ஏன் வரவில்லை’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மோகன் குமாரமங்கலம், மாணிக்கம் தாகூர், அமெரிக்கை நாராயணன் போன்ற காங்கிரஸ் நிர்வாகிகளும் துரைமுருகனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் மோதல் மேலும் வலுத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x