

விடுமுறை, பண்டிகை நாட்களில்இயக்கப்படும் சுவிதா சிறப்பு ரயில்களிலும், ஆம்னி பேருந்துகளிலும் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதால், பெரும்பாலான மக்களின் சொந்த ஊர் பயணம் சுமையாக மாறி வருகிறது.
முன்பெல்லாம் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் பயணம் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. ஆனால் அந்த நிலை தற்போது படிப்படியாக மாறி வருகிறது. சொந்த ஊருக்கு செல்வதே தற்போது மிகப்பெரிய சுமையாக மாறி வருகிறது. போக்குவரத்து கட்டணமும், போக்குவரத்து நெரிசலும் அதற்கு முக்கிய காரணமாக உள்ளன. இந்த ஆண்டில் பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டதால், சென்னையில் இருந்து லடக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். மக்களின் இந்த தேவையை கருத்தில் கொண்டு ரயில்வேயும், ஆம்னி பேருந்து நிறுவனங்களும் பல மடங்கு கட்டணத்தை வசூலித்துள்ளன.
இதுதொடர்பாக பொதுமக்கள் சிலர் கூறும்போது, “பண்டிகை நாட்களில் திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு ஆம்னி பேருந்துகளில் வழக்கமான நாட்களைவிட 70 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. வீண் அலைச்சல் இல்லாமல் சொகுசான பயணத்தை மேற்கொள்ளத்தான் ஆம்னி பேருந்துகளை நாடுகிறோம். ஆனால் அதிலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. பேருந்து நிறுத்தத்துக்கு பேருந்துகள் வருவதில் காலதாமதம் ஏற்படுகிறது. சில பேருந்து நிலையங்களில் இடைத்தரகர்கள் ரூ.500வரை கட்டணத்தை உயர்த்திவசூலிக்கிறார்கள். ஆம்னி பேருந்துகளுக்கென தனியாக கட்டணம்நிர்ணயிக்காமல் அதிக கட்டணம்வசூலித்தால் ஆம்னி பேருந்துகள்மீது நடவடிக்கை என அரசு கூறுவது வெறும் கண்துடைப்பாக உள்ளது” என்றனர்.
தீர்வு எப்போது?
மக்களின் புகார் தொடர்பாக போக்குவரத்து துணை ஆணையரக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சிறப்பு குழுக்களை அமைத்து அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ஆம்னி பேருந்து கட்டண நிர்ணயம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. போக்குவரத்து துறையில் சட்டத்திருத்தம் மேற்கொண்டு ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயித்தால் தீர்வு ஏற்படும் என்பதை தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளோம்’’ என்றனர்.
முன்பெல்லாம் ஏற்கெனவே இயக்கப்படும் விரைவு ரயில்களின்கட்டணத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சிறப்பு கட்டண ரயில்கள் மற்றும் சுவிதா ரயில்கள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. சுவிதா சிறப்பு ரயிலில் பயணிகளின் தேவையை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு 20 சதவீத டிக்கெட்டுகளுக்கும் கட்டணம் பல மடங்கு அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இதனால் ரயில் கட்டணம் பல மடங்கு அதிகரிப்பதுடன், சாதாரண மக்களுக்கு இதுபோன்ற ரயில்களில் பயணம் செய்வது எட்டாக்கனியாகி விட்டது.
பொங்கலையொட்டி தென்மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட சுவிதா சிறப்பு ரயில்களில் ஒருடிக்கெட்டின் கட்டணம் ரூ.5000-ஐ தாண்டியுள்ளது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டியில் ஒரு டிக்கெட் ரூ.1,315-க்கு விற்கப்பட்டது. இதுதொடர்பாக ரயில்வே தரப்பில் கேட்டபோது, ‘‘சொகுசாகவும், விரைவாகவும் பயணம் செய்வோரின் வசதிக்காகவே இதுபோன்ற சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறோம். வழக்கமாக இயக்கப்படும் விரைவு ரயில்களில் எந்த மாற்றமும் செய்வதில்லை’’ என்றனர். கி.ஜெயப்பிரகாஷ்