Published : 17 Jan 2020 08:15 AM
Last Updated : 17 Jan 2020 08:15 AM

தமிழக பாஜக தலைவர் யார்?- நாளை அறிவிக்க வாய்ப்பு

சென்னை

பாஜக தேசியத் தலைவர் தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற இருப்பதால் தமிழக பாஜகதலைவர் நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், கடந்த செப்டம்பர் 1-ம் தேதி தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு கடந்த நான்கரை மாதங்களாக பாஜக மாநிலத் தலைவர் பதவி காலியாக உள்ளது. பாஜக உறுப்பினர் சேர்க்கை, உள்கட்சித் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல், குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவான போராட்டங்கள் ஆகியவற்றால் தமிழக பாஜக தலைவர் தேர்தல் தள்ளிப்போனது.

தற்போது பாஜகவில் கிளை, மண்டல (ஒன்றியம், நகரம், பகுதி), மாவட்டத் தலைவர்கள் தேர்தல் முடிந்து 234 மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், 39 தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மாநிலத் தலைவர் தேர்தல் மட்டுமே நடக்க வேண்டியுள்ளது.

பொதுக்குழு கூட்டம்

பாஜக தேசிய பொதுக்குழுக் கூட்டம் வரும் 19, 20 தேதிகளில்டெல்லியில் நடக்க உள்ளது. அப்போது கட்சியின் தேசியத் தலைவர் தேர்தல் நடத்தப்படும். இந்தத் தேர்தலில் மாநிலத் தலைவர்கள், தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். எனவே, தேசியத் தலைவர் தேர்தலுக்கு முன்பாக மாநிலத்தலைவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டாக வேண்டும்.

எனவே, தமிழக பாஜக தலைவர் தேர்தல் வரும் 18-ம் தேதி (நாளை) சென்னையில் நடக்க இருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் தெரிவித்தார். பாஜக மாநிலத் தலைவர் யார் என்பதை முடிவு செய்வதற்காக கடந்த 5-ம் தேதி சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. யாரை மாநிலத் தலைவராக நியமிக்கலாம் என்று மாநில நிர்வாகிகள், துணை அமைப்புகளின் மாநிலத் தலைவர்களிடம் தேசிய இணை அமைப்பு பொதுச்செயலாளர் சிவ் பிரகாஷ், தேசிய செய்தித் தொடர்பாளர் நரசிம்ம ராவ் ஆகியோர் கருத்துகளை கேட்டறிந்தனர்.

10 பேர் பட்டியல்

கருத்துகளின் அடிப்படையில், 10 பேர் கொண்ட பட்டியலை தேசியத் தலைவர் அமித் ஷா, தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா, தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரிடம் அளித்துள்ளனர்.

முன்னாள் மாநிலத் தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில பொதுச்செயலாளர்கள் வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், மாநில துணைத் தலைவர்கள் நயினார் நாகேந்திரன், டி.குப்புராமு, மாநிலச் செயலாளர்கள் கே.டி.ராகவன், ஆர்.சீனிவாசன், இளைஞரணி தேசிய துணைத் தலைவர் ஏ.பி.முருகானநந்தம் உள்ளிட்டோர் மாநிலத் தலைவர் போட்டியில் இருப்பதாகவும், இவர்களைத் தவிர வேறு சிலரின் பெயர்களை ஆர்எஸ்எஸ் பரிந்துரை செய்திருப்பதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x