Published : 17 Jan 2020 08:07 AM
Last Updated : 17 Jan 2020 08:07 AM

இந்திய - ஜப்பான் கடலோர காவல் படை வீரர்கள் கூட்டு பயிற்சி: சென்னையை ஒட்டியுள்ள வங்கக் கடல் பகுதியில் நடைபெற்றது

இந்திய - ஜப்பான் நாட்டு கடலோரக் காவல் படை வீரர்களின் கூட்டு பயிற்சி சென்னையை ஒட்டியுள்ள வங்க கடல் பகுதியில் நடைபெற்றது.

இரு நாடுகளுக்கு இடையேயான 19-வது ஆண்டு கூட்டு பயிற்சியை மேற்கொள்ள ஜப்பான் நாட்டு கடலோரக் காவல் படை கப்பல் ‘எச்சிக்கோ’, கடந்த 13-ம் தேதி சென்னை வந்தது. இதில், ஜப்பான் நாட்டு கடலோரக் காவல் படை வீரர்கள் 60 பேர் வந்தனர்.

இதைத்தொடர்ந்து, இருநாட்டு வீரர்களுக்கும் புதிய தொழில்நுட்பங்களைக் கையாள்வது, கடல் பாதுகாப்பை உறுதிப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், சென்னையை ஒட்டியுள்ள வங்கக் கடல் பகுதியில் நேற்று இரு நாட்டு வீரர்கள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டனர். ‘சாயோக் கைஜின்’ என பெயரிடப்பட்ட இக்கூட்டுப் பயிற்சியில் கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட வணிகக் கப்பலை மீட்கும் பணிகளை இரு நாட்டு வீரர்களும் தத்ரூபமாக செய்து காண்பித்தனர்.

பின்னர், இந்திய கடலோரக் காவல் படையின் இயக்குநர் ஜெனரல் கிருஷ்ணசாமி நடராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உலக அளவில் கடலோரக் காவல் படையில் ஜப்பான் 2-வது இடத்திலும், இந்தியா 4-வது இடத்திலும் உள்ளன. தற்போது, இந்திய கடலோரக் காவல் படையிடம் 145 கப்பல்கள், 62 விமானங்கள் உள்ளன.

50 கப்பல்கள், 60 இலகு ரக விமானங்கள், 16 மார்க்- 3 ரக விமானங்களை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இவற்றில், 16 மார்க்-3 ரக விமானங்கள் வரும்மார்ச் மாதம் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட உள்ளன.

இந்திய கடலோரக் காவல் படையிடம் 2025-ம் ஆண்டில் 200 கப்பல்கள், 100 விமானங்கள் இருக்கவேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளோம். கடந்த ஆண்டு ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களைப் பிடித்துள்ளோம். நடப்பு ஆண்டு இதுவரை ரூ.175 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களைப் பிடித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.செய்தியாளர்கள் சந்திப்பின்போது, ஜப்பான் கடலோர காவல் படையின் தளபதி அட்மிரல் டகஹிரோ ஒகூஷிமா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x