

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தேக்கம்பட்டியில் பவானி ஆற்றங்கரையோரப் பகுதியில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயில் யானைகளுக்கான நலவாழ்வு முகாம் நடந்துவருகிறது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கோயில்கள் மற்றும் மடங்களுக்குச் சொந்தமான 28 யானைகள் பங்கேற்றுள்ளன.
முகாமில் சத்தான உணவு, பசுந்தீவனங்கள், நடைப்பயிற்சி, ‘ஷவர் பாத்' குளியல், பூரண ஓய்வு என யானைகள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெறபல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், முகாமில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு யானைகள் நலவாழ்வு முகாம் நேற்று காலை முதலே களைகட்டத் தொடங்கியது. யானைகள் குளிப்பாட்டப்பட்டு, அலங்கரிக்கப்பட்டன. பின்னர் முகாமில் உள்ள பிள்ளையார் கோயிலில் யானைகள் அழைத்து வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர், அங்கு பொங்கல் வைக்கப்பட்டது.
பொங்கல் பொங்கி வழிந்ததும், சுற்றியிருந்த யானைகள் அனைத்தும் ஆனந்த பிளிறல் எழுப்ப, பாகன்களும், முகாம் ஊழியர்களும் `பொங்கலோ பொங்கல்' என குரல் எழுப்பி, உற்சாகமாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தொடர்ந்து, யானைகளுக்கும், முகாமில் உள்ளவர்களுக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது.