Last Updated : 17 Jan, 2020 07:24 AM

 

Published : 17 Jan 2020 07:24 AM
Last Updated : 17 Jan 2020 07:24 AM

வெளி மாவட்ட வியாபாரிகள் வாங்க வராததால் விற்பனையாகாமல் தேங்கிய செங்கரும்புகள்: விவசாயிகள், உள்ளூர் வியாபாரிகளுக்கு வருவாய் இழப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி, வெளிமாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் நிகழாண்டு செங்கரும்புகளை வாங்க வராததால், தஞ்சாவூர் மாவட்டத்தில் செங்கரும்புகள் பெருமளவு விற்பனையாகாமல் தேங்கின. இதனால் விவசாயிகள், உள்ளூர் சிறு வியாபாரிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் அணைக்கரை, திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, சூரக்கோட்டை, ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் நிகழாண்டு சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் செங்கரும்புகள் பயிரிடப்பட்டிருந்தன. மாசி மாதம் விதைக்கும் பணிகள் தொடங்கி, மார்கழி இறுதியில் அறுவடை செய்யப்படும் இந்தசெங்கரும்புகள் தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமின்றி, சென்னை, விழுப்புரம், மதுரை, திருச்சி உள்ளிட்டவெளி மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதற்காக அந்தந்த மாவட்டவியாபாரிகள் டிசம்பர், ஜனவரிமாதங்களில் வந்து கரும்பு வயல்களைப் பார்வையிட்டு விலைபேசி முன்தொகை கொடுத்துவிட்டு,பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்பு அறுவடை செய்து கொண்டு செல்வது வழக்கம்.

ஆனால், நிகழாண்டு வெளிமாவட்ட வியாபாரிகள் வராததால், உள்ளூர் சிறு வியாபாரிகள் மட்டுமே கரும்புகளை வாங்கி உள்ளூரில் விற்பனை செய்தனர். இதனால், மாவட்டத்தில் கரும்புகள் அதிகமாக விற்பனைக்கு வந்தன.

ஜன. 14-ம் தேதி இரவு 7 மணிவரை 10 கரும்புகள் கொண்ட ஒருகரும்பு கட்டின் விலை ரூ.200-லிருந்து 250 வரை விற்பனையானது. நேரம் செல்லச் செல்ல கரும்பு விற்பனையாகாமல் தேங்கியதால் வியாபாரிகள் விலையை குறைத்து விற்பனை செய்தனர். அப்போதும், கரும்பு விற்பனை சூடுபிடிக்கவில்லை.

தஞ்சாவூர், கண்டியூர், நடுக்கடை, திருவையாறு, மாரியம்மன்கோவில் போன்ற பகுதிகளில் நேற்று கரும்பு கட்டு ரூ.30-க்கு விற்பனை செய்யும் நிலைக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டனர். கரும்புகள் விற்பனையாகாமல் இருந்ததால் விவசாயிகளிடமிருந்து விலை கொடுத்து வாங்கிய உள்ளூர் வியாபாரிகளுக்கும், நேரடியாகவிற்பனை செய்த விவசாயிகளுக்கும் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது.

இதுகுறித்து சின்னகண்டியூரைச் சேர்ந்த கரும்பு விவசாயி செல்லதுரை கூறியது: எங்களது பகுதியில் ஆண்டுதோறும் செங்கரும்புதான் பயிரிடுகிறோம். அறுவடை நேரத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் கரும்புகளை பெரு வியாபாரிகள் வாங்கி, லாரிகளில் ஏற்றிச் சென்று விற்பனை செய்வார்கள்.

ஆனால், நிகழாண்டு கரும்புகள்வாங்க வெளிமாவட்ட வியாபாரிகள் வரவில்லை. உள்ளூர் சிறு வியாபாரிகள்தான் 2 ஆயிரம், 5 ஆயிரம் எண்ணிக்கையில் கரும்புகள் வாங்கினர்.

இந்த ஆண்டு கரும்பு உயரம் அதிகமாகவும், செழிப்பாகவும் வளர்ந்திருந்தால் கூடுதல் விலைக்கு விற்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், வெளிமாவட்ட வியாபாரிகள் வராததால், எங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கரும்புகள் வாங்க வியாபாரிகள் வராததால், சிலஇடங்களில் இன்னும் வெட்டப்படாமல் வயல்களிலேயே கரும்புகள் தேங்கியுள்ளன. நிகழாண்டில் கரும்பு விவசாயிகள், வியாபாரிகளுக்கு கரும்புகள் கசப்பையே தந்துள்ளன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x