

தமிழகத்தில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தும் முடிவை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி டாஸ்மாக் கடைகள் முன்பு போராட்டம் நடத்திய மாணவ, மாணவியர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி, ஈவு இரக்கமின்றி அராஜகத்தில் ஈடுபட்டதை வன்மையாக கண்டிக்க விரும்புகிறேன்.
சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தை ஒடுக்க தடியடி நடத்தியதில் பல மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் மீது காவல்துறையினர் பலாத்காரமாக தாக்கி, மானபங்கப்படுத்தப்பட்டுள்ள செய்தி எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஒரு மாணவியை காவல்துறை உதவி ஆணையரே பூட்ஸ் காலால் எட்டி உதைக்கும் புகைப்படம் நாளேடு ஒன்றில் வெளிவந்துள்ளது. மதுவுக்கு எதிராக போராடிய மாணவ, மாணவிகளிடம் காவல்துறையினர் மிகவும் அநாகரீகமாக நடந்துள்ளனர்.
மாணவிகளின் ஆடைகளையும், கூந்தலையும் பலாத்காரமாக பிடித்து, இழுத்து வெறியாட்டம் ஆடியுள்ளனர். இத்தகைய காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டுள்ளன. அதை அடிப்படையாக வைத்து தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல நேற்று முன்தினம் நெல்லை மாவட்டம், கலிங்கப்பட்டியில் போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி, கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு, கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். அமைதியான முறையில் போராட்டம் நடத்திய வைகோ மீது கொலை முயற்சி உட்பட 12 பிரிவுகளில் வழக்கு தொடுக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இன்று நடைபெறுகிற முழு அடைப்பு போராட்டத்தை ஒடுக்க தமிழக ஆட்சியாளர்கள் காவல்துறையினர் மூலமாக தமிழகம் முழுவதும் வெறியாட்டத்தில் ஈடுபட்ட செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. ஜனநாயக முறைப்படி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்துகிற அடிப்படை உரிமையை ஜெயலலிதா ஆட்சி காலில் தூக்கிப் போட்டு மிதித்து செயல்பட்டு வருகிறது.
காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழப்பு குறித்தோ, அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நடக்கிற மதுவிலக்கு ஆதரவு போராட்டங்கள் குறித்தோ, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இதுவரை எவ்வித கருத்தும் கூறாமல் இருப்பது சர்வாதிகாரப் போக்கையே வெளிப்படுத்துகிறது. ரோம் நகரமே தீப்பற்றி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்ததை ஜெயலலிதாவின் செயல்கள் நமக்கு உணர்த்துகின்றன.
எனவே, மதுவிலக்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். தமிழகத்தில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தும் முடிவை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். இதுவே தமிழகத்தில் தற்போது கொழுந்து விட்டு எரியும் மதுவிலக்கு ஆதரவு போராட்டத்திற்கு தீர்வாக இருக்க முடியும்'' என்று இளங்கோவன் கூறியுள்ளார்.