

திண்டுக்கல் அருகே சிறுமலை மலை கிராமங்களில் இன்று விவசாய பணிகளில் உதவியாக இருக்கும் குதிரைகளுக்கு நன்றி சொல்லும் வகையில் குதிரைப்பொங்கல் கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை மலைகிராமங்களான தாழைக்கடை, கடமான்குளம், அகஸ்தியர்புரம், தென்மலை புதூர் உள்ளிட்ட மலைகிராமங்களில் இன்று வேளாண்மைப்பொருட்களை எடுத்துச்செல்ல உதவியாக இருக்கும் குதிரைக்கு பொங்கல் வைத்து மலைகிராம மக்கள் வழிபாடு நடத்தினர்.
மலைகிராம பகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்கு இடுபொருட்களை கொண்டுசெல்லவும், விளைந்த பொருட்களான எலுமிச்சை, சவ் சவ், சிறுமலை வாழைப்பழம் மற்றும் காய்கறிகளை கொண்டுவரவும் முறையான சாலை வசதிகள் இல்லாததால் குதிரைகள் பயன்படுத்தப்படுகிறது.
இந்த குதிரைகளுக்கு நன்றி சொல்லும் விதமாக ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் நாளான்று மலைகிராமமக்கள் குதிரை பொங்கல் கொண்டாடுகின்றனர்.
தரைப்பகுதியில் உள்ள விவசாயிகள் மாடுகளை குளிப்பாட்டி, அலங்கரித்து பொங்கல் வைத்து வழிபடுவது போல், மலைகிராமமக்கள் குதிரைகளை குளிப்பாட்டி, அலங்கரித்து, பொங்கல் வைத்தும், குதிரைகளுக்கு பொங்கலை ஊட்டியும் வழிபட்டனர்.