

மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டுப் போட்டி நேரத்தை அரை மணி நேரம் நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம்.
அவற்றில் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் தை 1,2,3 தேதிகளில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு மிகுந்த வரவேற்பு உண்டு.
இந்நிலையில், அவனியாபுரத்தில் தை 1-ம் நாளான நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. இதனைத் தொடர்ந்து இன்று (ஜன.15) பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. காலை 8 மணியளவில் ஜல்லிக்கட்டு கோலாகலமாகத் தொடங்கியது.
மொத்தம் 700 காளைகள் பங்கேற்றுள்ளன. இந்தப் போட்டியில் 900-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை சுமார் 75 பேர் வீதம் களத்தில் இறக்கப்பட்டு வருகின்றனர்.
மதியம் 3 மணி நிலவரப்படி, 497 காளைகள் களமிறக்கப்பட்டன. 9 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் இன்னும் நிறைய காளைகள் களம் காண வேண்டியிருப்பதால் ஜல்லிக்கட்டு விளையாட்டு நேரத்தை மாலை 4.30 வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மாலை 3 மணி வரை 23 பேர் காயமைடைந்தனர். அவர்களில் சிலருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.