

திருவள்ளுவர் திருநாளில் அந்த மகானை வணங்குகிறேன் என, பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
உலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரைப் போற்றும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் தை இரண்டாம் நாள் (ஜன.16) திருவள்ளுவர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இத்தினத்தையொட்டி, சென்னையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு தமிழக துணை முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும், பலரும் தங்களின் சமூக வலைதளப் பக்கங்களில், திருக்குறள்களைப் பதிவிட்டு திருவள்ளுவரின் பெருமையை நினைவுகூர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, திருவள்ளுவர் குறித்து தமிழில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, அவர் இன்று தன் ட்விட்டர் பக்கத்தில், "திருவள்ளுவர் திருநாளில் அந்த மகானை வணங்குகிறேன். அவரது உன்னத எண்ணங்களும் இலக்கியப் படைப்புக்களும் பல கோடி மக்களுக்கு, இன்றும் வலிமையை வழங்குகின்றன. சமூக நீதி, சமத்துவம் மற்றும் கருணையை நோக்கி நாம் தொண்டாற்றிட, அவை நம்மை ஊக்குவிக்கின்றன" எனப் பதிவிட்டுள்ளார்.