73 ஆண்டுகள் இணை பிரியா மணவாழ்வு மரணத்திலும் ஒன்றானது: மனைவி இறந்த சோகத்தில் கணவரும் உயிரிழப்பு 

73 ஆண்டுகள் இணை பிரியா மணவாழ்வு மரணத்திலும் ஒன்றானது: மனைவி இறந்த சோகத்தில் கணவரும் உயிரிழப்பு 
Updated on
1 min read

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே 73 ஆண்டுகளாக தன்னுடன் வாழ்ந்த மனைவி உயிரிழந்ததால், அவரின் திடீர் இழப்பைத் தாளாமல் கணவரும் உயிரிழந்தார். இதனால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூரில் உள்ள ஆர்.எஸ். பாரதி நகரைச் சேர்ந்தவர் பச்சைமுத்து (96). இவரது மனைவி குள்ளம்மாள் (90). மில் தொழிலாளியான பச்சைமுத்துவுக்கு 1947-ம் ஆண்டு அவரின் 23-வது வயதில் திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிக்கு மூன்று ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் என மொத்தம் 7 பிள்ளைகள் உள்ளனர்.

கடந்த 73 ஆண்டுகளாக பச்சைமுத்து-குள்ளம்மாள் தம்பதி எவ்விதப் பிரச்சினையுமின்றி மகன்கள், மகள்கள், பேரன், பேத்திகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். இதனாலேயே அத்தம்பதி அவ்வூரில் மிகப் பிரசித்தம். அவர்களை அப்பகுதியில் அனைவரும் மதிப்புடனும் மரியாதையுடனும் பார்ப்பர். சுப நிகழ்ச்சிகளில் அவர்களிடம் ஆசிர்வாதம் பெறாமல் யாரும் நிகழ்ச்சியை நடத்த மாட்டார்கள்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குள்ளம்மாளுக்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். மனைவி இறந்த செய்தி கேட்டு துக்கம் தாங்க முடியாமல் இருந்த அவரது கணவர் பச்சைமுத்து அழுதபடி இருந்தார். அவரை உறவினர்கள் தேற்றிய நிலையில், அவரும் சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

73 ஆண்டுகள் ஒன்றாக இணைபிரியாமல் இல்வாழ்வில் பயணித்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்த தம்பதி, மரணத்திலும் ஒன்று சேர்ந்தது. பச்சைமுத்து- குள்ளம்மாள் மரணம் உறவினர்கள், பிள்ளைகளைத் தாண்டி அப்பகுதியில் உள்ளவர்களிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in