Published : 16 Jan 2020 10:55 AM
Last Updated : 16 Jan 2020 10:55 AM

காவி உடையில் திருவள்ளுவர்: எதிர்ப்பு கிளம்பியதால் புகைப்படத்தை நீக்கிய குடியரசு துணைத் தலைவர்

காவி உடையணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பகிர்ந்த வெங்கய்ய நாயுடு.

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, திருவள்ளுவர் காவி உடையணிந்து, திருநீறு அணிந்திருப்பது போன்ற புகைப்படத்தை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். இது மீண்டும் சர்ச்சையை எழுப்பியுள்ள நிலையில், பலரும் வெங்கய்ய நாயுடுவை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், எதிர்ப்பு காரணமாக, அந்த புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன், தமிழக பாஜகவின் அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில், திருவள்ளுவர் காவி உடையணிந்து, திருநீறு அணிந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தது. அதற்கு முன்பு, திருவள்ளுவர் வெள்ளை உடை அணிந்த புகைப்படத்தைத் தான் அரசு உட்பட அனைத்து அமைப்புகளும் பயன்படுத்தி வந்தன.

இந்நிலையில், பாஜக வெளியிட்ட அந்த புகைப்படம் கடும் சர்ச்சையை எழுப்பியது. திருவள்ளுவரைக் காவிமயமாக்க இந்துத்துவ சக்திகள் முயல்வதாகவும், அவர் அனைத்துத் தரப்பினருக்கும் பொதுவானவர் எனவும், திமுக உள்ளிட்ட கட்சிகள் தமிழக பாஜகவின் பதிவுக்குக் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து, திருவள்ளுவர் சிலை அவமதிப்பு சம்பவமும் நடைபெற்றது. மேலும், திருவள்ளுவர் சிலைக்கு காவித் துண்டு அணிவித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இன்று (ஜன.16) திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, திருவள்ளுவர் காவி உடையணிந்து, திருநீறு அணிந்திருப்பது போன்ற புகைப்படத்தை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

வெங்கையா நாயுடுவின் பதிவு

அப்பதிவில், "சிறந்த தமிழ்ப் புலவரும், தத்துவவாதியும், ஞானியுமான திருவள்ளுவரை அவரது பிறந்த நாளில் நினைவு கூர்கிறேன். அவர் நமக்கு அளித்த திருக்குறள், இந்த உலகில் உன்னதமான வாழ்க்கையை வாழ்வதற்கு மனித குலத்திற்கு வழிகாட்டுகிறது.

அறநெறி, மாண்புகள், தார்மிகநெறி ஆகியவற்றை வலியுறுத்தும் தமிழ் இலக்கியங்களில் மிகவும் பாரம்பரியம் மிக்கதாக கருதப்படும் திருக்குறள், அரசு நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து நமக்கு வழிகாட்டுகிறது. இந்த நூல் எல்லா காலத்திற்கும் பொருத்தமானதாக திகழ்கிறது!" எனப் பதிவிட்டுள்ளார்.

திருவள்ளுவர் காவி உடையணிந்தது போன்ற புகைப்படத்தை வெளியிட்ட வெங்கய்ய நாயுடுவை சமூக வலைதளங்களில் விமர்சித்தனர்.

அந்தப் பதிவுக்குக் கீழ், திமுக எம்.பி. செந்தில் குமார், திருவள்ளுவர் வெள்ளை உடை அணிந்துள்ள புகைப்படத்தைப் பகிரிந்து அதனை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். மேலும், "இது தவறான செயல். திருவள்ளுவரைக் குறிப்பிட்ட மதம், சாதிக்குள் அடையாளப்படுத்தும் விதமாக, காவி உடையணிந்த புகைப்படத்தை தயவு செய்து நீக்குங்கள். அவர் எல்லோராலும் கொண்டாடப்படுபவர்" எனப் பதிவிட்டுள்ளார்.

வெள்ளை உடையில் திருவள்ளுவர்

இந்நிலையில், எதிர்ப்பு காரணமாக, காவி உடையணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை நீக்கி விட்டு, வெள்ளை உடையிலான திருவள்ளுவர் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெங்கய்ய நாயுடு பகிர்ந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x