

ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பெரியார் விருது இந்த ஆண்டு அறிவிக்கப்படாதது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில், பெரியார் விருது அறிவிக்கப்பட்டது குறித்து தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கடந்த ஆண்டுக்கான தமிழ்த்தாய் விருது, கம்பர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் கடந்த 13-ம் தேதி அறிவிக்கப்பட்டன. அதில், பெரியார் விருது அறிவிக்கப்படாதது ஏன்? என்று திமுக தலைவர் ஸ்டாலின், தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அப்பதிவில், "தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் தந்தை பெரியார் விருது யாருக்கு என்பது அறிவிக்கப்படவில்லை. கடந்த ஆண்டுக்கு முன், சொந்தக் கட்சியைச் சேர்ந்தவருக்கு வழங்கியதைப் போல் இந்த ஆண்டு வழங்க ஆள் இல்லையா? அல்லது டெல்லி எஜமானர்களின் மனம் குளிர்வதற்காக தவிர்க்கப்பட்டுள்ளதா?" என ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், முதலில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், 10-ம் தேதியிட்டு வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில் பெரியார் விருது செஞ்சி ராமச்சந்திரனுக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், தமிழ் வளர்ச்சித் துறை வெளியிட்ட அறிக்கையிலும் பெரியார் விருது செஞ்சி ராமச்சந்திரனுக்கும், அம்பேத்கர் விருது முனைவர் அர்ஜுனனுக்கும் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் பாண்டியராஜன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "பெரியார் விருது தமிழ் வளர்ச்சித் துறையால் அறிவிக்கப்படுவதல்ல! பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முன்னாள் அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரனுக்கு இவ்விருதை அறிவித்துள்ளனர். தமிழ் வளர்ச்சித் துறையால் அறிவிக்கப்பட்ட 35 விருதுகளுடன் பெரியார், அம்பேத்கர் விருதுகளையும் முதல்வர் வரும் 20-ம் தேதி வழங்குகிறார்" எனப் பதிவிட்டுள்ளார்.