Published : 15 Jan 2020 04:43 PM
Last Updated : 15 Jan 2020 04:43 PM

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால் கவலையில்லை: துரைமுருகன் 

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை. எங்களுக்கு என்ன நஷ்டம்? என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகன் தொண்டர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தற்போது வரை திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் உள்ளது. இன்னும் பிரியவில்லை. கூட்டணியில் யாருக்கும் திமுக பாரபட்சம் காட்டுவது இல்லை. கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடித்து வருகிறோம். கூட்டணிக் கட்சிகள் வேறு முடிவை எடுத்தால் அதற்கு திமுக பொறுப்பல்ல. எங்கள் கூட்டணியில் இருக்கும் வரை அனைவரையும் மரியாதையுடன்தான் நடத்துகிறோம். இனியும் அது தொடரும்.

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் எங்களுக்குக் கவலையில்லை. காங்கிரஸ் விலகுவதால் எங்களுக்கு என்ன நஷ்டம்? காங்கிரஸ் விலகினாலும் அது திமுகவின் வாக்கு வங்கியைப் பாதிக்காது. அவர்களுக்கு ஓட்டே இல்லை. அவர்கள் கூட்டணியை விட்டுப்போனால் போகட்டும். காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து காலம்தான் பதில் சொல்லும் என டி.ஆர்.பாலு கூறினார். நான் பதிலே சொல்லிவிட்டேன்'' என்று துரைமுருகன் தெரிவித்தார்.

நடந்தது என்ன?

தமிழகத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலில் பதவிகளைப் பகிர்ந்துகொள்வதில் திமுக காங்கிரஸ் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கடந்த 10-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், ‘உள்ளாட்சித் தேர்தலில் போதிய இடங்களை திமுக வழங்கவில்லை. இது கூட்டணி தர்மத்துக்கு புறம்பானது’ எனக் கூறியிருந்தார்.

மறைமுகத் தேர்தல் நடப்பதற்கு முந்தைய நாளில் வெளியான இந்த அறிக்கை திமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

மேலும், சில இடங்களில் அதிமுகவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கவுன்சிலர்கள் வாக்களித்தால் திமுக வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்டது. குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சியில் அதிக இடங்களை திமுக கூட்டணி பெற்றிருந்தும் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் ஆதரவுடன் அதிமுக வெற்றி பெற்றது. இது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில், ‘மதவாத, பாசிச சக்திகளையும், அவர்களை ஆதரிப்பவர்களையும் திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து வருகிறார். திமுகவின் உறுதியான நிலைப்பாட்டுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் இருக்கும்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திமுக பங்கேற்காதது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்படுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து காலம்தான் பதில் சொல்லும் என டி.ஆர்.பாலு நேற்று கூறினார். இந்த சூழலில்
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை. எங்களுக்கு என்ன நஷ்டம்? என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x