

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினரான டி.ராஜா நேற்று திடீரென மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள முருகன் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட டி.ராஜா, நேற்று மதியம் உணவு இடைவேளை முடிந்து இரண்டாவது மாடியில் உள்ள கூட்ட அரங்குக்கு சென்றுள்ளார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்துவிட்டார். அருகில் இருந்த கட்சித் தொண்டர்கள் தண்ணீர் தெளித்து அவரை எழுப்பியுள்ளனர். அவர் எழுந்து நின்று தனக்கு ஒன்றும் ஆகவில்லை என்று கூறியுள்ளார்.
அதன் பிறகு கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் , மாநில செயற்குழு உறுப்பினர் சி.மகேந்திரன் உள்ளிட்டோர், ஜி.என்.செட்டி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்து வந்தனர். அவர் சிகிச்சைக்காக மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மாநில செயற்குழு உறுப்பினர் மகேந்திரன் கூறும் போது, “ராஜா உயர் ரத்த அழுத்தம் காரணமாகவும், காற்றோட்டம் குறைவாக இருந்த இடத்தில் இருந்ததாலும் சோர்வடைந்து மயக்கமடைந்ததாக கூறப்படுகி றது. அவருக்கு பெரிய அளவுக்கு பாதிப்பு ஏதும் இல்லையென்றும் சாதாரண மயக்கம்தான்” என்று தெரிவித்தார்.