

தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுடன் தொடர்புடைய ஜல்லிக்கட்டு, தமிழர்களின் பாரம்பரிய மரபுவழி வீர விளை யாட்டுகளில் ஒன்று. பொங் கல் பண்டிகை நாட் களில் மதுரை மாவட்டம் அவனியா புரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடக் கும் ஜல்லிக்கட்டைக் காண உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்கள் திரள்வர்.
வாடிவாசலில் இருந்து புழுதி பறக்க சீறிப் பாயும் காளைகளை அடக்கும் வீரர்கள், அவர்களை திமிலாலும், கொம்புகளாலும் பந்தாடும் காளைகள் என ஜல்லிக் கட்டில் விறுவிறுப்புக்கும், சுவா ரசியத்துக்கும் பஞ்சம் இருக்காது.
கிரிக்கெட் போட்டிகளில் வீரர்கள் அனைத்து பாதுகாப்பு உபகரணங் களும் அணிந்து விளையாடு கின்றனர். ஆனால், ஜல்லிக் கட்டில் களமிறங்கும் வீரர்கள் நிராயுதபாணியாக உயி ரைப் பணயம் வைத்து காளை களை அடக்குகின்றனர்.
ஆனால், கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு கிடைக்கும் கவுரவமும், மரியாதை யும் தங்களுக்கு கிடைப்பதில்லை என மாடுபிடி வீரர்கள் ஆதங்கம் அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு உடல் தகுதித் தேர்வு, அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடை பெற்றது. இதற்காக முந்தைய நாள் இரவே தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து திரண்ட ஆயிரக்கணக்கான மாடுபிடி வீரர்கள் உடல் தகுதி தேர்வு நடந்த இடங்களில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பல கி.மீ. தூரம் வரிசையில் காத்திருந்தனர்.மறுநாள் காலை அவர்களுக்கு சாப்பாடு, குடிநீர் கூட வழங்காமல் உடல் தகுதித் தேர்வு பரிசோதனைக்காக ஒரு அறையில் அதிகாரிகள் அடைத்து வைத்திருந்தனர். இயற்கை உபாதையை தணிக்கச் சென்றால் வரிசையில் இடம் கிடைக்காது என்பதால் அதற்கு கூட வழியின்றி கால் கடுக்க நீண்ட நேரம் காத்திருந்து உடல்தகுதித் தேர்வில் பங்கேற்றனர். இதற்காக காத்திருந்த வீரர்களை லத்திகளை காட்டி அச்சுறுத்தி கூனி, குறுக நிற்க வைத்திருந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
முறையான திட்டமிடல், போதிய இடவசதியுள்ள இடங்களில் உடல் தகுதித்தேர்வு நடத்தப்படாததால், அவனியாபுரத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் லேசான தடியடி நடத்தி அவர்களை கட்டுப்படுத்தினர்.
கவுரவமாக நடத்துங்கள்..!
மாடுபிடி வீரர் மணி என்பவர் கூறுகையில், ‘‘23-வது ஆண்டாக, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கிறேன். இதுவரை 236 தங்கப் பதக்கம், 280 வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளேன். ஆட்டுக்குட்டி, பீரோ, புல்லட் என்று ஏராளமான பரிசுகளையும் வென்றுள்ளேன். பரிசுகளை வெல்வதை விட இந்தப் போட்டியில் பங்கேற்பதுதான் எங்களுக்கு கவுரவம். ஆனால், வாடிவாசலில் நிற்கிற அந்த நிமிடங்கள் வரைதான் எங்களுக்கு கைத்தட்டலும், கவுரவமும் கிடைக் கிறது. அதற்கு முன் உடல் தகுதித் தேர்வு முதல், வாடிவாசலில் களமிறங்கும் வரை பல்வேறு அவமானங்களை சந்திக்கிறோம்.
காளை குத்தினால் மரணம் என்ற நிலையில் உயிரை பணயம் வைத்து பங்கேற்கிறோம். எங்களுக்கு அரசும், அதிகாரிகளும் உரிய அங்கீகாரமும், மரியாதையும் வழங்க மறுக்கின்றனர். என்றார்.
பங்கேற்கும் ஆர்வம் குறையும்..!
இதுபற்றி உடல்தகுதித் தேர்வில் பங்கேற்ற ஜீவா என்பவர் கூறியதாவது: ஜல்லிக்கட்டு எங்களுக்கு உடலில் இருக்கும் ரத்தம் போன்றது. நான் பொறியாளர். இவ்வளவு படித்தும் மாடு பிடிக்க வருவது அந்த விளையாட்டு மீதான காதலே. 2017-ம் ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இடுப்பில் காயம் ஏற்பட்டது. அதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். சமீபத்தில் கப்பல் துறையில் வேலை கிடைத்தது. ஆனால், மருத்துவப் பரிசோதனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டது தெரியவந்ததால் அந்த வேலைவாய்ப்பு பறிபோனது. அதை பற்றிக் கூட கவலையில்லை. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் மாடுபிடி வீரர்களை தடியடி நடத்தி விரட்டுவதும், கவுரவக் குறைச்சலாக நடத்துவதையும் பார்க்கும்போது இந்த விளையாட்டில் பங்கேற்க வேண்டுமா என நினைக்கத் தோன்றுகிறது.
பாரம்பரிய வீர விளையாட்டின் அடையாளமான மாடுபிடி வீரர்களை போற்ற வேண்டும். வீரர்கள் இல்லாவிட்டால் ஜல்லிக்கட்டு இல்லை. அவர்களை இழிவாக நடத்தினால் எதிர்காலத்தில் யாரும் காளைகளை அடக்க முன்வர மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.