

திண்டுக்கல் அருகே பால கிருஷ்ணாபுரம் ஊராட்சி என்.ஜி.ஓ., காலனியில் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டத்தின் கீழ் விளையாட்டு உபகரணங்கள், சீருடைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பா.வேலு முன்னிலை வகித்தார்.
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் விளையாட்டு உபகரணங்கள், சீருடைகள், சான்றிதழ்களை மாணவர்களுக்கு வழங்கிப் பேசியதாவது:
அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. கிராமப்புற இளைஞர்கள், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டம் இது. நீங்கள் ஜெயலலிதாவை பார்த்திருப்பீர்கள். அவர்கள் உங்களுக்கு பாட்டி முறை. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., உங்களுக்கு தாத்தா முறை.
நல்ல பெயரை வாங்கவேண்டும் பிள்ளைகளே என அவர் பாடியுள்ளார். இதைப் பின்பற்றி நீங்கள் நல்ல பெயரை வாங்கவேண்டும்.
தமிழக அரசு விளையாட்டை ஊக்குவிக்க பல் வேறு உதவிகளைச் செய்து வருகிறது. இதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும், என்று பேசினார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் கவிதா உட்பட பலர் கலந்துகொண்டனர். திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ்பாத்திமா மேரி நன்றி கூறினார்.