Published : 15 Jan 2020 09:18 AM
Last Updated : 15 Jan 2020 09:18 AM

நகர்ப்புற மக்கள் கிராமங்களுக்கு சென்று பொங்கல் கொண்டாட வேண்டும்: ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு வாழ்த்து

கோவை

நகர்ப்புறங்களில் வாழும் மக்கள், அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்று கோவை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித் துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பொங்கல் விழா என்பது உழவர் திருநாள். நமது தமிழ் கலாச்சாரம், மண்ணுடன் கலந்து உழவுத் தொழில் புரிந்து, உணவு தயாரித்து, முழுமையாக வாழும் கலாச்சாரம். இதை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது. குறிப்பாக, நகரங்களில் இருப்பவர்கள் இதை ஞாபகத்தில் வைத்து கொள்ள வேண்டும்.

மாட்டுப் பொங்கலன்று சினிமா தியேட்டருக்கோ, ரெஸ்டா ரண்டுக்கோ செல்வதற்குப் பதிலாக, அருகில் இருக்கும் ஏதாவது ஒரு கிராமத்துக்குச் சென்று, கிராம மக்களுடன் சேர்ந்து, பொங்கலைக் கொண்டாடுங்கள். குறிப்பாக, இளைஞர்கள் கிராமங்களுக்குச் சென்று, அங்கு நடக்கும் கொண்டாட்டங்களில் பங்கெடுக்க வேண்டும்.

கிராமங்களுக்குச் செல்ல முடியாவிட்டால், குறைந்தபட்சம், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டியையாவது உடுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழ் கலாச்சாரம், தமிழ் மொழி, தமிழ் மண்ணை நாம் இந்த தலைமுறையில் காப்பாற்றா விட்டால், அது இல்லாமல் போய்விடும்.

ஒரு கலாச்சாரத்தில் ஒரு தலைமுறைக்கு தெம்பும், பெருமையும் வேண்டுமென்றால் கலாச்சாரத்தைக் காப்பாற்ற வேண்டும். உழவர் திருநாளான இந்த பொங்கல் திருநாளில் உழவர்களுடன் ஏதாவது ஒரு வகையில் நீங்கள் தொடர்பு வைத்து கொள்ள வேண்டும். இந்த புது வருடம் ஆரோக்கியமான, அன்பான, எல்லாவற்றுக்கும் முக்கியமாக வெற்றிகரமாக இருக்க வேண்டும் என்பது எனது ஆசை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஈஷா யோகா மையம் சார்பில் நாளை (ஜன. 16) பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை மாட்டுப் பொங்கல் விழா ஆதியோகி சிலை முன் நடைபெற உள்ளது. மேலும், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, குஜராத், மகாராஷ்ட்ரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பாரம்பரிய நாட்டு மாடுகளின் கண்காட்சி இன்று மதியம் முதல் வரும் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x