Published : 15 Jan 2020 07:47 AM
Last Updated : 15 Jan 2020 07:47 AM

சகோதரத்துவம், சமத்துவத்துடன் கொண்டாடி மகிழ்வோம்; ஆளுநர், முதல்வர், தலைவர்கள் பொங்கல் திருநாள் வாழ்த்து

சென்னை

சமத்துவம் சகோதரத்துவத்துடன் பொங்கலைக் கொண்டாடுவோம் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: வேளாண் மக்களின் உழைப்பையும் தியாகத்தையும் போற்றிடும் வகையில் எழுச்சியுடன் தமிழர்களால் கொண்டாடப்படும் இந்த தைத் திருநாளில், இயற்கைக்கு நமது பிரார்த்தனைகளையும் நன்றியையும் செலுத்துவோம். சமத்துவம், சகோதரத்துவத்துடன் கொண்டாடப்படும் பொங்கல் திருநாளின் தொடக்கமானது அனைத்து குடும்பங்களுக்கும் மகிழ்ச்சியையும், செழிப்பையும் அள்ளித்தர வாழ்த்துகின்றேன்.

முதல்வர் பழனிசாமி: தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் எனது அன்பிற்குரிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளம்கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். பொங்கல் பண்டிகையை சிறப்பான முறையில் கொண்டாடிட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்புடன், ரூ.1000 ரொக்கமும் வழங்கி தமிழக அரசு சிறப்பித் துள்ளது. இந்த இனிய நாளில்,மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ்ந்திட வேண்டும்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்: பொங்கல் விழா நம்மை எல்லாம் தலைநிமிரச் செய்யும் தமிழர் விழா. அதிமுக அரசின் பொங்கல் பரிசுகளை பெற்றுச் செல்லும் கோடான கோடி மக்கள் தங்கள் நெஞ்சார, வாயார அரசை வாழ்த்துவதைக் கேட்கையில் எங்கள் இதயம் பெருமகிழ்ச்சி அடைகிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி மட்டுமல்ல, ஒவ்வோர் ஆண்டும் அதுவே தமிழர்களது வாழ்க்கையை வளப்படுத்தும் உற்சாக மொழியாக இருக்கிறது. சாதி, மத, பேதமற்று நாம் அனைவரும் ஓரினம், தமிழினம் என்ற உன்னத உணர்வைப் பெறும் வகையில் ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம் தழைக்க சமத்துவப் பொங்கலைச் சமைப்போம். மனித சமூகத்தை பிளவுபடுத்தும் சக்திகளை மறையச் செய்வோம்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: தமிழக மக்கள் படுகிற துன்பத்தில் இருந்து விடுபட்டு அரசியல் மாற்றம் ஏற்படுவதே அவர்களது வாழ்வாதாரத்துக்கு ஏற்றதாகும். அந்த வகையில் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தை பிறந்து விட்டது. தமிழக மக்களின் வாழ்வில் ஏற்றம் பெற வாழ்த்துகள்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழக மக்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள், சிக்கல்களுக்கு இந்த ஆண்டு தைத் திருநாள் தீர்வுகளை வழங்கும். தமிழர்களின் விருப்பம் போலவே அனைத்துத் தரப்பினரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: கடந்த ஆண்டு நடந்தது நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பது மக்கள் வாழ்வில் நல்லவையாக இருக்கட்டும். பொங்கல் திருநாளை பெற்றோர்களுடனும், குழந்தைகளுடனும் உற்றார் உறவினர்களுடனும், நண்பர்களுடனும் சேர்ந்து கொண்டாடி மகிழ்வோம்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: கோலம் போடும் எளிய ஜனநாயக எதிர்ப்பைக் கூட ஏற்கமுடியாத அராஜகம், மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கைகளை எதிர்த்து போராட அனைவரும் இப் பொங்கல் தினத்தில் சபதமேற்போம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: தைப்பொங்கல் சாதி, மதம் கடந்த திருநாள். இயற்கையையும், உழைப்பையும் போற்றுகிற உழவர்களின் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை உருவாக உழைத்திடுவோம்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: இந்தியாவில் மதச்சார்பற்ற ஒரே திருவிழா தமிழர் திருநாள்தான். பண்பாட்டுக் கொண்டாட்டங்களில் நமது போராட்ட உணர்வுகள் நீர்த்துப் போகாமல் பார்த்துக்கொள்வதும், அதேவேளையில் மக்களிடமிருந்து அந்நியப்பட்டு விடாமல் அவர்களோடு இணைந்து இத்தகைய விழாக்களில் பங்கேற்பதும் நமது கடமை.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: எவ்வளவு மனச்சுமைகள் இருந்தாலும், அவற்றை எல்லாம் மறந்துவிட்டு, நம்பிக்கையோடு தைப்பொங்கலைக் கொண்டாடி வருகின்ற தமிழக மக்களுக்கு, மகிழ்ச்சியூட்டும் காலத்தை உருவாக்க, அனைவரும் உறுதி ஏற்போம்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: பொங்கல் திருநாள், தமிழினத்தின் பெருமையையும், உயர் தனிச்சிறப்பையும் உலகுக்கு உரக்கச் சொல்கிறது. தமிழகத்துக்கு நல்லதொரு விடிவு காலம் பிறந்து, இழந்த பெருமைகளை எல்லாம் மீட்டெடுக்க இந்த நன்னாள் வழிகாட்டட்டும்.

சமக தலைவர் சரத்குமார்: முன்னோர்கள் தொன்றுதொட்டு வழக்காடி வரும் தை பிறந்தால் வழி பிறக்கும் போன்ற வார்த்தைகள், நம்பிக்கையின் விடியல்களாக நமக்கு அமையட்டும். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தைப்பொங்கல் தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகையாகும். மத்திய மாநில அரசுகளும், பொதுமக்களும் ஒருங்கிணைந்து இயற்கை விவசாயத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்பட உறுதியேற்போம்.

இவ்வாறு அறிக்கைகளில் கூறியுள்ளனர்.

மேலும், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவர் தி.தேவநாதன் யாதவ், மனிதநேய ஜனநாயகக் கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன், நாடாளு மன்ற உறுப்பினர்கள் சு.திருநாவுக்கரசு, டி.ஆர்.பாரிவேந்தர் உள்ளிட்ட பலர் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித் துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x