

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) துணைத் தலைவர் க.நாகராஜன் வெளியிட்ட அறிக்கை:
சென்னையில் நடந்துவரும் 43-வது புத்தகக் காட்சியில், அரசுக்கு எதிரான கருத்துகள் கொண்ட புத்தகங்கள் விற்பனை செய்த விவகாரத்தில் பத்திரிகையாளர் அன்பழகன் மீதான பபாசியின் செயல்பாட்டுக்கு பாரதி புத்தகாலயம், உயிர்மை, காலச்சுவடு உட்பட பல்வேறு பதிப்பகங்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.
இதற்கு மேலாக கடையடைப்பு செய்வதோ, பபாசி தலைவர் மற்றும் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு அரசியல் சாயம் பூசுவதோ சரியல்ல.
புத்தகங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது ஆழமான ஜனநாயகப்பூர்வமான செயல்பாடு. பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டுதான் பபாசி இதை கடந்த 43 ஆண்டுகளாக செய்து வருகிறது. அதனால் பபாசி வலுவாகவும், ஜனநாயகப்பூர்வமாகமும் தொடர்ந்து இயங்க வேண்டும். எனவே, 43-வதுசென்னை புத்தகக் காட்சி எந்த இடையூறும் இல்லாமல் அமைதியாக தொடரவும், பபாசி ஜனநாயகப்பூர்வமாக செயல்படவும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
போராட்டம்
இந்நிலையில், பபாசி-யின் செயல்பாடுகருத்து சுதந்திரத்துக்கு எதிராக இருப்பதாகக் கூறி, புத்தக காட்சியில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அரங்கம் அருகே எழுத்தாளர் அருணன், கவிஞர் சல்மா உட்பட 20-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் வாயில் கருப்புத்துணி கட்டி நூதன முறையில் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்குவந்த பபாசி நிர்வாகிகளுக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
காவல்துறையினர் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் நிறைவுக்கு வந்தது.