

ச.கார்த்திகேயன்
‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலியாக பொங்கல் விடுமுறை நாட்களில் சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழி பயன்பாடு தொடர்பாக நாடாளுமன்ற ஆட்சிமொழிக் குழு மேற்கொள்ள இருந்த ஆய்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் இந்தி மொழி பயன்படுத்தப்படுவதன் முன்னேற்றத்தை ஆய்வு செய்ய, நாடாளுமன்ற ஆட்சிமொழிக் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் தலைவராக உள்துறை அமைச்சர் உள்ளார். உறுப்பினர்களாக 20 மக்களவை உறுப்பினர்கள், 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுவின் 2-வது துணைக் குழு சென்னையில் உள்ள தேசிய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனம், ரயில்வே தேர்வு வாரியம், ரயில்வே பாதுகாப்பு படை, இந்திய உணவுக் கழகம், இந்திய விமான நிலையங்கள் ஆணையம், மத்திய நிலத்தடிநீர் வாரியம் உள்ளிட்ட 15 மத்திய அரசு நிறுவனங்களில் ஜனவரி 14, பொங்கல் விடுமுறை நாட்களான 15, 16 ஆகிய தேதிகளில் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு மத்திய அரசு அலுவலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை பொருட்படுத்தாது பொங்கல் விடுமுறையில் ஆய்வு செய்வதில் நாடாளுமன்ற ஆட்சிமொழிக் குழு உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆய்வின் இடையே ஆவடியில் உள்ள சிஆர்பிஎஃப் படை மையத்தில் நடைபெறும் பொங்கல் விழாவிலும் பங்கேற்க அக்குழு திட்டமிட்டிருந்தது.
உலக அளவில் சாதி, மதச்சார்பற்று கொண்டாடப்படும் ஒரே பண்டிகையான பொங்கல் விழாவின்போது குடும்பத்துடன் இருக்க முடியாத நிலை ஏற்பட்டதை நினைத்து மத்திய அரசு அலுவலர்கள் வேதனைக்குள்ளாயினர்.
இந்நிலையில், இது தொடர்பாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் 13-ம் தேதியிட்ட இதழில் "அலுவலகங்களில் இந்தி மொழி பயன்பாடு குறித்த ஆய்வுக்காக பொங்கல் விடுமுறை நாட்களில் வரும் நாடாளுமன்ற ஆட்சிமொழிக் குழு: மத்திய அரசு அலுவலர்கள் வேதனை" என்ற தலைப்பில் செய்தி வெளியாகி இருந்தது. அதனடிப்படையில் அரசியல் தலைவர்கள் பலர் இந்த ஆய்வுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிக்கையில், மத்திய நாடாளுமன்ற ஆட்சிமொழிக் குழு பொங்கல் திருநாள் கொண்டாடப்படும் நாட்களில் ஆய்வு செய்ய வருவது கடும் கண்டனத்துக்கு உரியது. தமிழர்களின் தன்மான உணர்வுக்கும், மொழி உணர்வுக்கும், கலாச்சார மற்றும் பண்பாட்டு உணர்வுக்கும் மதிப்பளித்து, பொங்கல் விடுமுறை நாட்களில் நடைபெறும் இந்த ஆய்வை ரத்து செய்து, தமிழகத்திலுள்ள மத்திய அரசு அலுவலக ஊழியர்கள் நிம்மதியாக பொங்கல் திருநாளை கொண்டாட வழிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
மதிமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட்டிருந்த அறிக்கையில், "இந்தித் திணிப்பை எதிர்த்துப் போர்க்கோலம் பூணும் தமிழகத்தில்தான் இந்தி மொழியின் அலுவல் பயன்பாடு பற்றி ஆய்வு நடத்த நாடாளுமன்ற ஆட்சிமொழிக் குழு வருகிறது. அதுவும் பொங்கல் விடுமுறை நாட்களில் என்றால் பாஜக அரசின் நோக்கத்தை தமிழக மக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். பொங்கல் விடுமுறை நாட்களில் நாடாளுமன்ற ஆட்சிமொழிக் குழு தமிழகத்தில் ஆய்வு நடத்தும் பயணத் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ’இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலியாக நாடாளுமன்ற ஆட்சிமொழிக் குழு, ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் மேற்கொள்ள இருந்த ஆய்வை தள்ளிவைத்துள்ளது. இது தொடர்பான உத்தரவை அந்தந்த துறைகளின் தலைமை அலுவலகங்கள், சென்னையில் உள்ள அலுவலகங்களுக்கு நேற்று அனுப்பியுள்ளது. இதனால் மத்திய அரசு அலுவலர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
இந்த குழு அமைத்திருந்த பயண திட்டத்தில், ஒரு அலுவலகத்துக்கு குழு சென்றடையும் நேரத்திலிருந்து, அடுத்த அலுவலகத்துக்கு சென்றடையும் நேரத்துக்கு இடையே சுமார் 45 நிமிடங்கள், 60 நிமிடங்கள் என்ற அளவிலேயே வகுக்கப்பட்டுள்ளது. இந்த 45 - 60 நிமிடங்களில், ஒரு அலுவலகத்தில் ஆய்வை முடித்துவிட்டு, அடுத்த அலுவலகத்துக்கு பயணிக்கும் நேரமும் அடங்கும். இவ்வளவு குறுகிய நேரத்தில் எப்படி அந்த குழு, அலுவலகங்களில் இந்தி பயன்பாட்டை முறையாக ஆய்வு செய்ய முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
“இந்த ஆய்வு முழுக்க முழுக்க, இந்தி பயன்பாடு தொடர்பானது இல்லை. அந்தந்த துறைகளில் வரவேற்று கவுரவிப்பதால் கிடைக்கும் சால்வை, நினைவு பரிசு, பை, ஆய்வு என்ற பெயரைச் சொல்லி, அரசு செலவில் சென்னையில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்வது போன்றவற்றுக்காகத் தான்” என்றும் குற்றம் சாட்டுகிறார்கள் ஒரு சில மத்திய அரசுத்துறை அலுவலர்கள்.