

திருவள்ளூர் மாவட்டத்தில் அம்மா கிராம இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை அமைச்சர்கள் பெஞ்சமின், பாண்டியராஜன் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.
இளைஞர்களின் ஆரோக்கியம், மனவளத்தை மேம்படுத்தவும், கூட்டு மனப்பான்மையை உருவாக்கவும், விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கவும் தமிழகத்தில் ஊராட்சிகள், பேரூராட்சிகளில் அம்மா கிராம இளைஞர் விளையாட்டுத் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
அத்திட்டத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வானகரம் ஊராட்சியில் நேற்று ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது, வானகரம் ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கடேஸ்வரா நகரில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டுத் திடலை, அமைச்சர்கள் கிரிக்கெட், வாலிபால் விளையாடி செயல்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.
இந்நிகழ்வுகளில், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அருணா, திருவள்ளூர் கோட்டாட்சியர் வித்யா, அம்பத்தூர், பொன்னேரி எம்எல்ஏக்களான அலெக்சாண்டர், பலராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வுகளில் அமைச்சர் பெஞ்சமின் பேசும்போது, “திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகள், 10 பேரூராட்சி பகுதிகளில் 536 இடங்களில் அம்மா கிராம இளைஞர் விளையாட்டுத் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. இத்திட்டம் மூலம், 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு கபடி, வாலிபால், கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் திறமையான விளையாட்டு வீரர்களாக உருவாக்கப்படுவர்” என்றார்.
அமைச்சர் பாண்டியராஜன் கூறும்போது, “தமிழக அரசு விளையாட்டு வீரர்களுக்கு 4 சதவீதம் முன்னுரிமை அளித்து இதுவரை 1.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளது. மாணவர்கள், இளைஞர்கள் விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல், அதை வாழ்க்கை மற்றும் பணியாக பார்க்க வேண்டும். விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதன் மூலம் சாதிக்க முடியும். விளையாட்டுப் போட்டிகள் மூலமாக பணம் சம்பாதிப்பதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன” என்று கூறினார்.