Published : 15 Jan 2020 02:24 AM
Last Updated : 15 Jan 2020 02:24 AM

தைரியலட்சுமின்னா அம்மா; ‘தலைசுத்திருச்சு’ என நிற்கும் காரியக்காரர்: உதயநிதியின் வித்தியாசமான பொங்கல் வாழ்த்து

சென்னை

ரஜினிகாந்த் துக்ளக் ஆண்டு விழாவில் முரசொலியை இணைத்துப் பேச அது விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதற்கு திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எதிர்வினையாற்றியுள்ளார். ரஜினிகாந்தை விமர்சிக்கும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

துக்ளக் பண்டிகையின் 50-வது ஆண்டு விழா இன்று சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் துக்ளக் பத்திரிகை பற்றியும், சோ-வின் பெருமை குறித்தும் ரஜினி பேசிய பேச்சு திமுகவை வம்பிழுக்கும் விதமாக இருந்ததாக திமுகவினர் மத்தியில் கருத்து உருவாகியுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் துக்ளக் பத்திரிகையை சோ எவ்வாறெல்லாம் நடத்தினார்.

நையாண்டி, அறிவார்ந்த கட்டுரைகள், கேள்வி பதில் என என ஒரு துக்ளக் இனத்தையே உருவாக்கினார். 'முரசொலி வைத்திருந்தால் அவன் திமுககாரர் துக்ளக் வைத்திருந்தால் அவன் அறிவாளி’. துக்ளக் வைத்திருந்ததால் அவர் அறிவாளி ஆனாரா? அல்லது படித்ததால் ஆனாரா? என்பது தெரியவில்லை என ரஜினி பேசினார்.

இது பலத்த சர்ச்சையை உருவாக்கியது. ட்விட்டர், ஃபேஸ்புக் என சமூக வலைதளங்களில் ஆதரவு, எதிர்ப்பு என பரபரப்பானது. திமுகவினரும், ரஜினி ரசிகர்களும் அவர்களுக்கு ஆதரவான அரசியல் கட்சியினரும் பதிவுகளால் மோதிக்கொண்டனர். இந்நிலையில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது பங்குக்கு எதிர்ப்பைக் காட்டி பதிவு செய்துள்ளார்.

அவரது பதிவில் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதாவைப் புகழ்ந்துள்ள அவர் தலைசுத்திருச்சு என ரஜினியை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

ரஜினி ரசிகர்கள் மத்தியில் பேசும்போது செய்தியாளர் ஒருவர், ‘ரஜினி மக்கள் மன்றத்தின் கொள்கை என்ன’ என்று கேட்டார். எனக்கு அப்படியே தலை சுத்திருச்சு என்று ரஜினி பதில் அளித்தார். அப்போது தலை சுத்திருச்சு என்ற வாசகம் ட்ரெண்டானது.

தற்போது உதயநிதி ஸ்டாலின் அதைக் குறிப்பிட்டு பொங்கல் வாழ்த்து சொல்வதுபோல் ரஜினியை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் பதிவு:

“முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா-கால் நூற்றாண்டாக கால் பிடித்து காலம் கடத்தி ‘தலைசுத்திருச்சு’ என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுககாரன். நான் திமுககாரன். பொங்கல் வாழ்த்துகள்”

எனத் தெரிவித்துள்ளார்.

உதயநிதியின் பதிவுக்குக் கீழ் யார் காலில் யார் விழுந்தது என ஏராளமான ரஜினி ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x