

காஞ்சிபுரம் அருகே ரூ.4 லட்சம் மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள் திருட்டு போன வழக்கில், சென்னையைச் சேர்ந்த 6 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு சிலைகளை மீட்டுள்ளனர்.
காஞ்சிபுரத்தை அடுத்த திணையாம்பூண்டி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. அங்கு இருந்த ஐம்பொன்னால் ஆன ரூ.4 லட்சம் மதிப்புள்ள திரவுபதி அம்மன் மற்றும் அர்ச்சுனன் சிலைகளை மர்ம நபர்கள் கடந்த ஜூன் மாதம் திருடிச் சென்றனர். இது தொடர்பாக பெருநகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் போலீஸார் நடத்திய வாகனத் தணிக்கையின்போது, ஆவடி பட்டாபிராமைச் சேர்ந்த ரமேஷ்(25), திருவொற்றியூரைச் சேர்ந்த சின்னதுரை(38), மகிமைதாஸ்(42), ஆரோன்தாஸ் (44) ஆவடி பருத்திபட்டைச் சேர்ந்த குணசீலன்(36) ஆகியோர் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர் கள் அனைவரும் திரவுபதி யம்மன் கோயில் சிலை திருட்டு வழக்கில் தொடர்புடையவர்கள் என தெரியவந்தது.
பின்னர் அவர்கள் அளித்த தகவலின் பேரில் சென்னை முகப்பேரைச் சேர்ந்த பிரபுவின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு ஐம்பொன் சிலைகளையும் போலீஸார் மீட்டனர். பின்னர் பிரபுவுடன் சேர்த்து 6 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.