Published : 14 Jan 2020 06:01 PM
Last Updated : 14 Jan 2020 06:01 PM

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2020; தனித்தேர்வர்களுக்கான சிறப்பு பதிவு அனுமதி: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2020 எழுதும் தனித்தேர்வர்கள் தக்கல் முறையில் விண்ணப்பிக்க 2 நாட்களை ஒதுக்கியுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர், உஷாராணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநரக செய்திக்குறிப்பு:

“மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 06.01.20209 முதல் 13.01.2020 வரையிலான நாட்களுக்குள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கத் தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் "சிறப்பு அனுமதி திட்டத்தின்" (தக்கல்) கீழ் ஆன்-லைனில் 20.01.2020 மற்றும் 21.01.2020 ஆகிய நாட்களில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்-லைனில் விண்ணப்பிக்க அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்கள் ((Government Examinations Service Centres):
தனித்தேர்வர்கள் தங்களது விண்ணப்பங்களை தட்கல் திட்டத்தின் கீழ் ஆன் லைனில் பதிவு செய்திட கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்களுக்கு (Service Centres) நேரில் சென்று தங்களது விண்ணப்பங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

கல்வி மாவட்டவாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்களின் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்:

1. எஸ்.எஸ்.எல்.சி பழைய பாடத்திட்டத்தில் தோல்வியுற்றிருப்பின், தோல்வியுற்ற பாடங்களை மட்டும் தற்போதுள்ள பாடத்திட்டத்தில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். அறிவியல் பாடத்திற்கு வ.எண் 3-ல் குறிப்பிட்டுள்ள நடைமுறையினை கடைபிடிக்க வேண்டும்.

2. மெட்ரிக் / ஆங்கிலோ இந்திய பழைய பாடத்திட்டத்தில் ஓரிரு பாடங்களில்கூட தோல்வியுற்றிருப்பினும், மேற்படி தேர்வர்கள் பத்தாம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் ஒரேநேரத்தில் அனைத்துப் பாடங்களுக்கும் விண்ணப்பித்து (அறிவியல் செய்முறை மற்றும் கருத்தியல் உட்பட), அனைத்து பாடங்களையும் தேர்வெழுத வேண்டும்.

பகுதி ஐ-ல் தமிழ் மொழிப்பாடத்தை மட்டும் கட்டாயமாக தேர்வெழுதவேண்டும். தேர்வரின் கைவசம் உள்ள மெட்ரிக் / ஆங்கிலோ இந்திய அசல் மதிப்பெண் சான்றிதழை அரசுத் தேர்வு சேவை மையத்தில் சமர்ப்பித்துவிட்டு தற்போதுள்ள பாடத்திட்டத்தில் தேர்வெழுத விண்ணப்பிக்க வேண்டும். அறிவியல் பாடத்திற்கு வ.எண் 3-ல் குறிப்பிட்டுள்ள நடைமுறையினை கடைபிடிக்க வேண்டும்.

3. அறிவியல் பாடத்தைப் பொறுத்தவரை, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பித்தவர்கள் / அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்ட தனித் தேர்வர்கள் தற்போது கருத்தியல் தேர்விற்கு சிறப்பு அனுமதி திட்டத்தின் (தட்கல்) கீழ் விண்ணப்பிக்கலாம்.

4. அறிவியல் பாடத்தை ஏற்கனவே தேர்வெழுதி தோல்வியுற்றவர்கள் செய்முறைத் (practical) / கருத்தியல் (Theory) என்ற இரு பகுதிகளில் எந்தப் பகுதியில் தோல்வியடைந்தாலும் தோல்வியுற்ற பகுதிக்கு மட்டும் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்தும் முறை:

தனித்தேர்வர்கள் செலுத்த வேண்டிய தேர்வுக் கட்டணத் தொகை ரூ.125/- இவற்றுடன் கூடுதலாக சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.500/- மற்றும் ஆன்-லைனில் பதிவுக் கட்டணமாக ரூ.50/- உட்பட மொத்தம் ரூ.675/-ஐ சேவை மையங்களில் (service centres) பணமாக மட்டுமே செலுத்த வேண்டும். இத்தொகை பதிவுச் சீட்டில் (Registration Slip)-ல் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இந்த பதிவுச் சீட்டை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பதிவுச் சீட்டில் உள்ள எண்ணை கொண்டே தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்திடல் வேண்டும். தேர்வர் தான் விண்ணப்பித்த பாடங்கள் தான் பதிவுச் சீட்டில் பதியப்பட்டுள்ளதா என்பதை கண்டிப்பாக சரிபார்க்க வேண்டும்.

சேவை மையத்தில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

1. எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு படித்தமைக்கான அசல் மாற்றுச் சான்றிதழ்.

2. எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்.

3. மெட்ரிக்/ஆங்கிலோ இந்திய தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ்.

4. ஏற்கனவே தேர்வெழுதி தோல்வியுற்ற அனைத்துப் பருவங்களின் சான்றொப்பமிட்ட மதிப்பெண் சான்றிதழ் நகல்.

5. செய்முறைப் பயிற்சி வகுப்பில் பெயர் பதிவு செய்ததற்கான விண்ணப்ப அத்தாட்சி சீட்டு அல்லது அறிவியல் செய்முறைப் பயிற்சியில் கலந்து கொண்டமைக்கான பயிற்சி பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியரிடமிருந்து பெறப்பட்ட அத்தாட்சி சான்றிதழ் அசல்.

தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகள் விநியோகம்:

தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் செய்தித்தாளில் அறிவிக்கப்படும்.

தேர்வு மையங்கள்:

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து தனித்தேர்வர்களுக்கும் அந்தந்த கல்வி மாவட்டங்களிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தேர்வு மைய விவரம் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்படும். தனித்தேர்வர்களுக்கு தேர்வெழுத தற்போது வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தற்காலிகமானது எனவும், தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே, தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது”.

இவ்வாறு அரசுத்தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x