Published : 14 Jan 2020 04:51 PM
Last Updated : 14 Jan 2020 04:51 PM

விபத்தைத் தவிர்க்க ஓட்டுனர்களுக்கு நள்ளிரவில் தேநீர் வழங்கல்: அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு

திண்டுக்கல் மாவட்டம் வழியாக ஐயப்பன் கோயில் மற்றும் பொங்கல் சிறப்பு பேருந்துகளை இயக்கும் ஓட்டுனர்கள் மற்றும் ஏனைய கார், வேன் ஓட்டுனர்கள் களைப்படையாமல் வாகனங்களை இயக்க தேநீர், பிஸ்கட்கள் அரசுபோக்குவரத்து கழகம் சார்பில் வழங்கப்பட்டது.

பழநி, திருப்பூர், கோயம்புத்தூரில் இருந்து திண்டுக்கல் வழியா குமுளி வரை ஐயப்ப பக்தர்களை ஏற்றிச்செல்லும் கார், வேன் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கும் ஓட்டுனர்கள் ஆகியோர் இரவு பயணத்தின்போது களைப்பு ஏற்படாமல் இருக்க, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திண்டுக்கல் மண்டலம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே நள்ளிரவு 1 மணிமுதல் அதிகாலை 5 மணிவரை சென்ற வாகனங்களை நிறுத்தி வாகன ஓட்டுனர்களுக்கு களைப்பை போக்கி புத்துணர்வு ஏற்படும் வகையில் தேநீர், பிஸ்கட் ஆகியவை நேற்றுமுன்தினம் இரவு வழங்கப்பட்டது.

மேலும் வாகனத்தை விபத்தின்றியும், விழிப்புடனும் இயக்க ஓட்டுனர்களுக்கு அரசு போக்குவரத்து அலுவலர்கள் அறிவுரை வழங்கினர். மேலும் பழநிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் பாதுகாப்பு கருதி, சாலையின் ஓரமாக நடந்துசெல்ல அறிவுறுத்தப்பட்டு, விபத்து விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை போக்குவரத்து அலுவலர்கள் வழங்கினர்.

நேற்று இரவு தொடங்கி ஓட்டுனர்களுக்கு புத்துணர்வு வழங்கும் நிகழ்ச்சி தொடர்ந்து இன்று இரவிலும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை அரசுபோக்குவரத்து கழக திண்டுக்கல் மண்டல பொதுமேலாளர் கணேசன் செய்துள்ளார்.

விபத்தைத் தவிர்க்கும்விதமாக அரசுபோக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ள தேநீர், பிஸ்கட்கள் வழங்கும் முறை இரவில் வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x