புதுச்சேரியில் புதுமுயற்சி: முதல் முறையாக அரசு பள்ளி குழந்தைகளுக்காக 19-ம் தேதி நாள் முழுக்க போட்டிகள், கலை நிகழ்வுகள்

வானவில் நிகழ்வுக்கான அழைப்பிதழ்
வானவில் நிகழ்வுக்கான அழைப்பிதழ்
Updated on
1 min read

புதுச்சேரியில் அரசு பள்ளி குழந்தைகளுக்காக வரும் 19-ம் தேதி முழுக்க ரங்கோலி, பட்டம் தயாரிப்பு, கலைபொருள்கள் தயாரிப்பு, கலைநிகழ்ச்சிகள் என போட்டிகள் கடற்கரை சாலையில் முதல்முறையாக வானவில் என்ற பெயரில் கல்வித்துறையால் நடத்தப்படுகிறது. அத்துடன் புதிய விஷயங்களை கற்க அரங்குகளும் அமைக்கப்படுகிறது.

புதுச்சேரி கல்வித்துறையானது அரசு பள்ளிக்குழந்தைகளுக்காக வானவில் 2020 என்ற நிகழ்வை வரும் 19-ம் தேதி நாள் முழுக்க கடற்கரை சாலையில் முதல்முறையாக நடத்துகிறது.

காலையில் பெண் குழந்தைகளுக்காக ரங்கோலி போட்டிகள் காலை 7 மணிக்கு தொடங்குகிறது. முதல்வர் நாராயணசாமி போட்டியை தொடக்கி வைப்பார். அதையடுத்து எல்கேஜி முதல் 2-ம் வகுப்பு வரையுள்ள குழந்தைகளுக்கு பட்டம் செய்யும் போட்டி காலை 8.30 மணிக்கு நடக்கும். அதைத்தொடர்ந்து 6 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள குழந்தைகளுக்கு கலை பொருட்கள் வடிவமைக்கும் போட்டிகள் காலை 8.30 முதல் 10.30 வரை நடக்கும்.

காலை 9 முதல் இரவு 9 வரை பல்வேறு அரங்குகளில் சாலை பாதுகாப்பு, அறிவியல் கார்னர், வாசிப்பு திருவிழா, அடல் டிங்கரிங் லேப், பலூன் மூலம் கற்றல், இசை கருவிகள், என்சிசி, என்எஸ்எஸ் என பல்வேறு வகையான தகவல்களை அறியலாம்.

மாலை 4 மணிக்கு அரசு பள்ளி குழந்தைகள் பேண்ட் இசை, தற்காப்பு கலை, சிலம்பாட்டம், பாரம்பரிய பேஷன் ஷோ, பப்பட் ஷோ, இசை நிகழ்வுகள், பாரம்பரிய நடனங்கள் ஆகியவை கடற்கரை சாலையில் நடைபெறும்.

அதே நேரத்தில் மாலை 4 மணியளவில் விழா மேடையில் பாடல்கள் குழுவாக பாடுதல், கதை சொல்லுதல் ஆகியவை நடைபெறும்.

ஏற்கெனவே பால்பவனில் நடந்த கலைப்போட்டிகளில் அரசு பள்ளி, கல்வித்துறையின் பால்பவன் குழந்தைகள், ஆசிரியர்கள் பங்கேற்ற போட்டிகளில் வென்றோர் தனித்திறமையாக வாய்ப்பாட்டு, இசைக்கருவிகள் மீட்டல், நடனம், ஆசிரியர்கள் திறன் வெளிபாடு ஆகியவை நிகழ்த்த உள்ளனர்.

இந்நிகழ்வுகள் இரவு 7.30 வரை நடைபெறும். பின்னர் குழந்தைகளுக்கும், ஆசிரியர்களுக்கும் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் பரிசளிக்கிறார். முதல் முறையாக ஆயிரக்கணக்கான அரசு பள்ளி குழந்தைகள் புதிய விஷயங்களை கற்கவும், திறன்களை வெளிகாட்டவும் ஒரு தளமாக இந்நிகழ்வு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in