

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. வாகன சோதனை களும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள் ளன. பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து டிஜிபி அலுவலகத்தில் இருந்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் கடிதம் அனுப் பப்பட்டுள்ளது. 12-ம்தேதி இரவு முதல் சுதந்திர தினம் முடியும் வரை வாகன சோதனையை தீவிரமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநில எல்லைகளில் கூடுதல் போலீஸார் நிறுத்தப்பட்டு சந்தேகத்துக்குரிய வாகனங்களில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.
தமிழகத்துக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுத் துறையும் எச்சரிக்கைவிடுத்துள்ளது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடு களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தமிழக கடலோர காவல் படை மூலம் தமிழகத்தின் 1,041 கி.மீ. நீள கடற்கரை முழுவதும் பயணம் செய்து சோதனை நடத்தப்படுகிறது. தீவிரவாதிகள் கடல் வழியாக நுழைவதை தடுக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களி லும், முக்கிய இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரயில் மற்றும் பஸ் நிலையங்கள், வழிபாட்டு தளங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகளில் போலீஸ் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சந்தேகப்படும் விதத்தில் வரும் நபர்கள் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி விடுதி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் கூடுதல் பாதுகாப்பு
சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பஸ் நிலையங்களில் மெட்டல் டிடெக்டர், மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நடத்தப்படுகிறது.
பயணிகளின் உடைமை களும் சோதனைக்கு உட்படுத்தப் படுகின்றன. இதனால் ரயில் பயணிகள் குறிப்பிட்ட நேரத் துக்கு முன்னதாகவே ரயில் நிலையத்துக்கு வர வேண்டும் என்று போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதா கொடியேற்றும் மேடை பகுதி முழுவதும் இப்போதே போலீஸ் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
புதிதாக தொடங்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் பாதையிலும், மெட்ரோ ரயிலிலும் பாதுகாப்பு சோதனைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.