Published : 14 Jan 2020 02:44 PM
Last Updated : 14 Jan 2020 02:44 PM

காங்கிரஸ் திமுக கூட்டணி தொடருமா என்பதை காலம்தான் பதில் சொல்லும்: டி.ஆர்.பாலு அதிரடி

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பிரச்சினை இல்லை என கே.எஸ்.அழகிரி தெரிவிக்க திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து காலம்தான் பதில் சொல்லும் என டி.ஆர்.பாலு அதிரடியாக தெரிவித்துள்ளார்.

திமுக காங்கிரஸ் கூட்டணிக்குள் உள்ளாட்சித்தேர்தல் இடம் பங்கீட்டின்போது தொடங்கிய பிரச்சினை கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற தலைவர் கே.ஆர்.ராமசாமியின் கூட்டறிக்கையால் மேலும் பற்றி எரியத்தொடங்கியது. கூட்டணி தர்மத்தை திமுக மீறிவிட்டது என்கிற கடுமையான வார்த்தை பிரயோகம் காரணமாக திமுக தலைமை கோபமடைந்தது.

இதையடுத்து இந்தியாவின் முக்கியமான பிரச்சினையாக ஓடிக்கொண்டிருக்கும் குடியுரிமைச் சட்டப்பிரச்சினைக்கான காங்கிரஸ் கூட்டிய அனைத்துக்கட்சிக்கூட்டத்தில் திமுக பங்கேற்காமல் புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

பங்கேற்காமல் புறக்கணித்தாலும் காங்கிரஸ் தலைவர்களிடம் தங்கள் அதிருப்தியை திமுக தலைமை தெரிவித்தது.
பின்னர் சென்னை திரும்பிய டி.ஆர்.பாலு திமுக தலைவர் ஸ்டாலினை அறிவாலயத்தில் சந்தித்து காங்கிரஸ் தலைவர்களுடன் பேசியது குறித்து விளக்கினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், காங்கிரஸ் கட்சியின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த டி.ஆர்.பாலு, “கூட்டணி தர்மத்தை மீறி விட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியும், அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் ராமசாமியும் முன்வைத்த குற்றச்சாட்டின் காரணமாகவே, காங்கிரஸ் நடத்திய கூட்டத்தில் பங்கேற்கவில்லை .

கே.எஸ்.அழகிரியின் அறிக்கையால், திமுகவினர் வருத்தத்தில் இருக்கின்றனர், அதை அவர் தவிர்த்திருக்கலாம். என தெரிவித்த அவர், திமுக - காங்கிரஸ் கூட்டணி பழைய நிலைக்கு திரும்பிவிட்டதா என்ற கேள்விக்கு, காங்கிரஸுடனான கூட்டணிப்பற்றி காலம் பதில் சொல்லப்போகுது இப்ப என்ன அவசரம். கூட்டணி குறித்து போஸ்ட்மார்ட்டம் செய்ய முயல்கிறீர்களா? அவர் ஒரு அறிக்கை வெளியிட்டார் அவர் அறிக்கை அளித்துள்ளதில் எங்களுக்கு உடன்பாடில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்”.
என டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

காங்கிரஸ் திமுக கூட்டணியில் பிரச்சினை இருந்து வரும் நிலையில் நேற்றைய கூட்டத்தில் பங்கேற்காதது குறித்தும், காங்கிரஸ் தலைவர்களுடன் பேசியது குறித்தும் திமுக தலைவர் ஸ்டாலினிடம் பேசிய பின்னர் டி.ஆர்.பாலு இவ்வாறு தெரிவித்திருப்பது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியுள்ளதாகவே அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x