

திண்டுக்கல் அருகே பாலிதீன் பயன்பாட்டை ஒழிக்க, வீடுகளில் சேரும் பாலிதீன் பைகளை சேகரித்து கொடுத்தால் கிலோவுக்கு ரூ. 10 வழங்கப்படுகிறது.
பேரூராட்சி நிர்வாகத்தின் இந்த புதிய முயற்சியால் பொதுமக்கள் பாலிதீன் பைகளை ஆர்வமாக ஒப்படைத்து வருகின்றனர்.
பாலிதீனில் பாலிபுரோபின் என்ற விஷத் தன்மையுள்ள மூலப்பொருள் உள்ளது. பாலிதீன் பைகளை எரிக்கும்போது, இந்த பாலிபுரோபின் காற்றில் ஆக்ஸிஜனுடன் கலந்து, சுவாசிப்போருக்கு நுரையீரலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.
சமீபத்தில் புற்றுநோய்க்கும் பாலிதீன் பயன்பாடு அதிகரிப்பு முக்கிய காரணமாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பாலிதீன் நூறு ஆண்டுகளானாலும் மக்காது.
பாலிதீன் மண்ணுக்கு நன்மை தரக்கூடிய மண் புழுக்கள், பாக்டீரியாக்களை அழித்துவிடும். மழைநீர் நிலத்தில் சேராமல் காலப்போக்கில் நிலத்தடி நீர்மட்டத்தை பாதிக்கும்.
அதனால், தமிழகத்தில் கடந்த 2010-ம் ஆண்டு பாலிதீன் பயன்பாட்டுக்கு அரசு முற்றிலும் தடை விதித்தது.
ஆனால் போதிய விழிப்புணர்வு இல்லாததால் பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்கள் தொடர்ந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் பாலிதீன் பைகளை பயன்படுத்தி வந்தனர். அதனால், தற்போது உள்ளாட்சி நிர்வாகங்கள் பாலிதீன் பயன்படுத்துவோரிடம் அவற்றைப் பறிமுதல் செய்தும், அபராதம் விதித்தும் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், பாலிதீன் பயன்பாட்டை முழுவதுமாகத் தடுக்க முடியவில்லை.
திண்டுக்கல் அருகே சின்னாளப்பட்டி பேரூராட்சியில் பாலிதீன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க, தற்போது புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள், வீடுகள், தெருக்களில் சேரும் பாலிதீன் பைகளை பேரூராட்சியில் கொண்டுவந்து கொடுத்தால் ஒரு கிலோவுக்கு ரூ.10 வழங்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் தங்கள் வீடுகளிலுள்ள பழைய பாலிதீன் பைகள், கழிவுகள், புதிய பாலிதீன் உறைகளை வெளியில் கொட்டாமல் சேகரித்து பேரூராட்சி அலுவலகத்தில் கொடுத்து பணம் பெற்று செல்கின்றனர். இந்த திட்டம் நேற்று முன்தினத்தில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் கோட்டைசாமியிடம் கேட்டபோது அவர் கூறியது: பாலிதீன், பார்த்தீனியம் செடிகள், சீமைக் கருவேலம் ஆகிய மூன்றும் மிக ஆபத்தானவை. பார்த்தீனியம், சீமைக் கருவேலம் ஊருக்கு வெளியே ஆபத்து ஏற்படுத்தக் கூடியவை. பாலிதீனை வீடுகளில் பயன்படுத்துவதால் நேரடியாக மனிதர்களை பாதிக்கிறது. பலமுறை விழிப்புணர்வு செய்தும் பாலித்தீன் பயன்பாட்டை ஒழிக்க முடியவில்லை. அதனால், பொதுமக்கள் பயன்படுத்தும் பாலிதீன் பைகளை நாங்களே எடுத்துக்கொண்டு அதற்கான பணத்தை வழங்குகிறோம்.
வெளியே கடைகளில் பாலிதீன் கழிவுகளுக்கு கிலோவுக்கு ரூ.2 முதல் ரூ. 5 வரைதான் கொடுக்கப்படுகிறது. ஆனால் நாங்கள் ரூ.10 கொடுக்கிறோம். அதனால், பேரூராட்சி பகுதி முழுவதும் காணப்படும் பாலிதீன் பைகள் ஒரு சில வாரங்களிலேயே முழுமையாக சேகரிக்கப்பட்டுவிடும். அதன்பின், அவற்றை பாதுகாப்பாக அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.