Published : 14 Jan 2020 10:17 AM
Last Updated : 14 Jan 2020 10:17 AM

ஈரோட்டில் செங்கரும்பிற்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் ஏமாற்றம்- ரேஷனில் வழங்கும் கரும்புக்கு கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கை

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க, கடந்த ஆண்டு வாங்கிய விலைக்கே அரசு கரும்பு கொள்முதல் செய்வதால் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கரும்பு விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டம் பிராமண பெரிய அக்ரஹாரம் அருகே நீர் மின் உற்பத்தி நிலையத்திற்காக காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி தண்ணீர் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக காவிரிக் கரையோரப் பகுதியான அக்ரஹாரம் பகுதியில் செங்கரும்பு அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டு நல்ல மழை பெய்து, காவிரி ஆற்றில் ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக நீர் வரத்து இருந்ததால், நெல்லுக்கு அடுத்தபடியாக கரும்பு அதிக அளவில் பயிரிடப்பட்டது.

இந்த ஆண்டு மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேலான நிலப்பரப்பில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்காக கடந்த 10 நாட்களாகவே, காவிரிக் கரையோரப் பகுதிகளில் கரும்பு வெட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காவிரிக்கரையோரம் நீர்வளம் மிக்க பகுதியில் விளைவதால் இந்த செங்கரும்பின் சுவை தனித்தன்மையோடு காணப்படுகிறது. இதனால் கோவை, திருப்பூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் ஈரோட்டில் இருந்து செங்கரும்பினை வாங்கிச் செல்கின்றனர். அதோடு, தமிழக அரசின் பொங்கல் பரிசுப் பொருட்களுடன் கரும்பும் வழங்கப்படுவதால் அரசுத்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் மொத்தமாக கரும்பு கொள்முதல் செய்து வருகின்றனர்.

ஆனால், வெளிச்சந்தையில் விற்கப்படும் கரும்பு விலையோடு ஒப்பிடுகையில், மிகக்குறைந்த விலை கொடுத்தே அரசும், வியாபாரிகளும் கொள்முதல் செய்து வருவதால், தங்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஈரோடு கரும்பு விவசாயிகள் கூறியதாவது:

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசாக கரும்புத்துண்டு வழங்கப்படுவதால், ஏராளமான விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளோம். வியாபாரிகள் சொல்லும் விலைக்கு கரும்பினை விற்கவேண்டிய நிலையில் இருந்து மாற்றம் ஏற்படும் என நினைத்தோம். ஆனால், இந்த ஆண்டும் உரிய விலை கிடைக்கவில்லை.

கடந்த ஆண்டு 400 கரும்புகள் கொண்ட ஒரு கட்டினை ரூ.6, 500 முதல் 7000 வரை அரசு அதிகாரிகள் வாங்கிச்சென்றனர். இந்த ஆண்டும் அதே விலைக்கு கரும்பினை வழங்க வேண்டும் என வாங்கிச் செல்கின்றனர். தங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்காததால், அதே விலைதான் தர முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அரசிடம் இருந்து நல்ல விலை கிடைக்கும் என நினைத்து, ஏற்கெனவே கரும்பு வாங்க வந்த வெளிமாவட்ட வியாபாரிகளைத் திரும்பி அனுப்பி விட்டோம். இப்போது அரசு சொல்லும் விலைக்கு கரும்பினை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் உரம், விவசாயக்கூலி என கூடுதல் செலவு செய்தும் அதிக விலைக்கு விற்க முடியவில்லை. ஆனால், வெளிச்சந்தையில் இரு மடங்கு அதிகமாக கரும்பு விற்பனையாகி வருகிறது.

எனவே, இனி வரும் காலங்களில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் கரும்பினை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும், என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x