

மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் ஜனவரி 15-ம் தேதி பொங்கல் திருநாளன்று நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க நேற்று மாடுபிடி வீரர்கள் முன்பதிவு நடைபெற்றது.
இதில் தமிழகம் முழுவதும் இருந்து திரண்ட ஏராளமான இளைஞர்கள் முந்திச் செல்ல முயன்றதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.
மதுரை மாவட்டம் பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் முன்பதிவு கடந்த வாரம் நடைபெற்றது. அவனியாபுரத்தில் மாடுபிடி வீரர்கள் முன்பதிவு நேற்று நடந்தது.
மாடுபிடி வீரர்களின் ஆதார் அட்டை அடிப்படையில் அவர்களின் வயதை ஆய்வு செய்து ரத்த அழுத்தம், உயரம், எடைபரிசோதிக்கப்பட்டு டோக்கன்கள் வழங்கப்பட்டன.
திருப்பரங்குன்றம் உதவி ஆணையர் ராமலிங்கம், அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பெத்துராஜ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார், மாடுபிடி வீரர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது நீண்ட வரிசையில் காத்திருந்த வீரர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸார், எச்சரித்தும் கேட்காததால் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.