பொங்கலை கொண்டாட சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்துகளில் இதுவரை 6.50 லட்சம் பேர் பயணம்: இன்று 1,700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று குவிந்த மக்கள் கூட்டம்.படம்: பு.க.பிரவீன்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று குவிந்த மக்கள் கூட்டம்.படம்: பு.க.பிரவீன்
Updated on
1 min read

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 4 நாட்களாக பேருந்துகள் மற்றும் ரயில்களில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றவண்ணம் உள்ளனர். அரசுப் பேருந்துகளில் இதுவரை 6.50 லட்சம் பேர் சென்றுள்ளனர்.

பொங்கல் பண்டிகையொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று, வர வசதியாக தமிழகம் முழுவதும் 30,120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில், சென்னையிலிருந்து 16,075 பேருந்துகளும், மற்ற நகரங்களில் இருந்து 14,045 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. கடந்த 4 நாட்களாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் கோயம்பேடு மட்டுமல்லாமல், தாம்பரம், மாதவரம், பூந்தமல்லி, கே.கே.நகர் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகை நாளை கொண்டாட உள்ள நிலையில், நேற்று அதிக அளவில் பொதுமக்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர்.

மக்கள் கூட்டம் வர, வர பணிமனைகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் அடுத்தடுத்து இயக்கப்பட்டன. கோயம்பேட்டில் ஒவ்வொரு நடைமேடையிலும் ஒலிபெருக்கி மூலம் பேருந்துகள் குறித்து பயணிகளுக்கு தகவல் அறிவிக்கப்பட்டது.

மற்ற பேருந்து நிலையங் களிலும் பயணிகளுக்கான உதவி மையங்கள் அமைக்கப்பட்டு பேருந்து வழித்தட எண்கள், பேருந்து செல்லும் ஊர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டன. மேலும் திருட்டுகளைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

பொங்கலையொட்டி சொந்த ஊருக்கு மக்கள் செல்ல வசதியாக சென்னையில் இருந்து கடந்த 4 நாட்களாக சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறோம். அரசு பேருந்துகளில் மட்டும் இதுவரை 6 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். மேலும், விரைவு பேருந்துகளில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு மூலம் ரூ.10 கோடிக்கு மேல் வசூலாகியுள்ளது.

பெரும்பாலான மக்கள் இன்று பயணம் செய்வார்கள் என்பதால், சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு மொத்தம் 1,700 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சிறப்பு ரயில்கள்

இதேபோல், சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 5-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் நேற்று இயக்கப்பட்டன. இதனால், சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் பிடிக்க பயணிகள் நீண்ட தூரத்துக்கு வரிசையில் பல மணி நேரம் காத்திருந்தனர். ஏராளமானோர் படிகளில் அமர்ந்தும் பயணம் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in