

ஒய். ஆண்டனி செல்வராஜ்
மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் வாடிவாசலில் 2,100 காளைகளை களமிறக்க அவற்றின் உரிமையாளர் களுக்கு டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் திருவிழா நெருங்கி விட்டதால் ஜல்லிக்கட்டு நடக்கும் அவனியாபுரம், பாலமேடு,அலங்காநல்லூரில் வாடிவாசல்கள் தயார் நிலையில் உள்ளன. பார்வையாளர்கள் அமர கேலரிகளும், காளைகள் பார்வையாளர்கள் பகுதிக்குள் நுழைந்து விடாமல் இருப்பதற்கு தேவையான தடுப்புகளும் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டு உள்ளூர், வெளியூர் பார்வையாளர்களைத் தாண்டி வெளிநாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளதால் காளைகளுக்கும், மாடுபிடிவீரர்களுக்கும் எவ்வித அசம்பாவிதமும் நேர்ந்துவிடாமல் இருக்க கால்நடை பராமரிப்புத் துறையும், சுகாதாரத் துறையும் முழு உடல் பரிசோதனை செய்த பிறகே காளைக்கும், வீரர்களுக்கும் உரியஅங்கீகாரத்தை வழங்கி வருகின்றன.
கடந்த வாரம் காளைகளை அடக்கும் வீரர்களுக்கான முன்பதிவு நடந்தது. நேற்று முதல் ஆன்லைனில் பதிவு செய்த காளைகளை, அதன் உடல் தகுதிச் சான்றை அடிப்படையாகக் கொண்டு அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசலில் களமிறக்கத் தேவையான டோக்கன்களை கால்நடை பராமரிப்புத் துறையினர் விநியோகம் செய்து வருகின்றனர்.
அவனியாபுரத்தில் பெருங்குடிசெல்லும் சாலையில் காளை களுக்கு முன்பதிவு டோக்கன் விநியோகம் நடைபெற்றது. அதுபோல, பாலமேடு மற்றும் அலங்காநல்லூரிலும் காளைகளின் உரிமையாளர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது. இதற்காக காளை உரிமையாளர்கள் பல கி.மீ.தூரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
வாடிவாசலில் காளைகளை களமிறக்குவதை ஊர் மற்றும் குடும்ப கவுரவமாகக் கருதுவதால், அவர்கள் நேற்று முன்தினம் இரவுமுதலே அவனியாபுரம், பாலமேடு,ஜல்லிக்கட்டில் திரண்டிருந்தனர்.கூட்டத்தைக் கட்டுப்படுத்த ஏராளமான போலீஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதுதொடர்பாக கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் தா.சுரேஷ் கிறிஸ்டோபர் கூறியபோது, ‘‘அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் காலை 9 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 2 மணி வரை நடைபெறும். இந்த நேரஇடைவெளிக்குள் 700 காளைகளைமட்டுமே அவிழ்த்துவிட முடியும். அதனால், 3 ஜல்லிக்கட்டு போட்டி களுக்கும் தலா 700 காளைகளுக்கு மட்டுமே டோக்கன் வழங்க மாவட்ட நிர்வாகம், எங்களை அறிவுறுத்தி உள்ளது. அதனால், நாங்கள் ஒவ்வொரு போட்டிக்கும் 700 காளைகள் வீதம் மொத்தம் 2,100 காளைகளுக்கு மட்டுமே டோக்கன்வழங்கினோம்” என்றார்.