Published : 13 Jan 2020 07:24 PM
Last Updated : 13 Jan 2020 07:24 PM

நெற்குன்றத்தில் துணிகரம்: வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து நகை, பணம் பறிப்பு

நெற்குன்றத்தில் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து 5 சவரன் நகை மற்றும் ரூ.1.10 லட்சம் பணத்தை 4 பேர் கொண்ட கும்பல் பறித்துச் சென்றது. அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை நெற்குன்றம் பல்லவன் நகர் பள்ளிக்கூடம் தெருவைச் சேர்ந்தவர் நூருல்லா. இவர் நெற்குன்றம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். இன்று காலை நூருல்லா வழக்கம்போல் தனது கடையில் வியாபாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவரது வீட்டிற்கு காரில் வந்து இறங்கிய டிப்டாப் ஆசாமிகள், தாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு நூருல்லாவை வரவழைத்துள்ளனர். வீட்டுக்கு வந்த நூருல்லாவிடம், ''நாங்கள் வருமான வரித்துறையினர். உங்கள் வீட்டில் சோதனை செய்ய வேண்டும்'' என்று தெரிவித்துள்ளனர்.

இதனால் மிரண்டுபோன நூருல்லா, ''நான் சாதாரண இறைச்சிக் கடை வைத்திருப்பவன். என்னுடைய வீட்டில் என்ன இருக்கிறது?'' என்று கேட்டுள்ளார். ''என்ன இருக்கிறது என்று நாங்கள் பார்க்கிறோம்'' என அத்துமீறி, பீரோவைத் திறந்து பணம், நகை உள்ளிட்டவற்றை எடுத்தனர்.

''உங்களைப் பார்த்தால் அதிகாரிகள்போல் தெரியவில்லையே? அடியாட்களைப்போல் தெரிகிறதே? இப்படி அத்துமீறுகிறீர்களே'' என்று கேட்ட நூருல்லா, ''போலீஸுக்கு போன் செய்யப்போகிறேன்'' என்று போனை எடுத்துள்ளார்.

அப்போது அந்த கும்பல், நூருல்லாவைத் தாக்கிவிட்டு பீரோவில் இருந்து எடுத்த ரொக்கப் பணம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மற்றும் 5 சவரன் நகையுடன் தாங்கள் வந்த காரில் ஏறித் தப்பிச் சென்றது.

வருமான வரித்துறை அதிகாரிகள் என போலியாக நடித்து, தன்னைத் தாக்கி, வீட்டிலிருந்து பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கும்பல் மீது நூருல்லா கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரைப் பெற்ற போலீஸார் சம்பந்தப்பட்ட நபர்கள் தப்பிச் சென்ற கார் எவ்வழியாக சென்றது என்பது குறித்து அப்பகுதியில் சிசிடிவி காட்சிப் பதிவுகளைச் சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x