

பண்ருட்டியில் மக்களின் சாலை மறியலால், அசம்பாவிதங்கள் நேராமல் இருக்க காவல் நிலையம் ஒன்றில் உட்புறமாகப் பூட்டுப் போடப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
பண்ருட்டி உட்கோட்ட காவல் சரகத்திற்குட்பட்ட முத்தாண்டிக்குப்பத்தில் காவல் நிலையம் இயங்கி வருகிறது. இந்தக் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் விஜயபாஸ்கர் தலைமையில் 22 காவலர்கள் பணிபுரிகின்றனர். இந்தக் காவல் நிலையத்திற்கென தனி ஆய்வாளர் இல்லாததால் காடாம்புலியூர் காவல் நிலைய ஆய்வாளரே இந்தக் காவல் நிலையத்திற்கான பொறுப்பும் வகிப்பது வழக்கம்.
முத்தாண்டிக்குப்பம் 3 சாலை சந்திப்பில் உள்ள காவல் நிலையத்தில் நுழைவு வாயில் கதவு உள்புறமாகப் பூட்டப்பட்டிருந்தது. புகார் கொடுக்க வந்திருந்த சிலர் வெளியே நின்றிருந்தனர். அப்போது காவல் நிலையம் ஏன் உள்புறமாகப் பூட்டப்பட்டிருக்கிறது எனக் கேட்டபோது, வல்லம் கிராமத்தில் சாலை மறியல் நடைபெறுவதால், காவல் நிலையத்தைப் பூட்டிவிட்டு அனைவரும் வெளியே சென்றுவிட்டனர் என்றனர்.
விசாரித்துக் கொண்டிருக்கும்போது, காவல் நிலையத்தின் உள்ளிருந்து வந்த பெண் காவலர் ஒருவர், "என்ன வேண்டும்" என்றார். "வாயில் கதவை ஏன் பூட்டி வைத்துள்ளீர்கள்?" எனக் கேட்டபோது, அவர் பதிலேதும் கூறாமல் சென்றுவிட்டார்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்டிருந்த காவலர்களிடம் இதுகுறித்து விசாரித்தபோது, "எங்கள் காவல் நிலைய எஸ்ஐ, தேர்வு மைய கண்காணிப்புப் பணிக்குச் சென்றுவிட்டார். அவர் இல்லை. இந்தக் காவல் நிலையம் எஸ்ஐ தலைமையிலான காவல் நிலையம் என்பதால், குறைந்த அளவே காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையம் முக்கியமான உணர்ச்சிமயமான பகுதியில் இயங்கி வருகிறது. காவல் தலைமை அதை உணராமல் இருப்பது வருத்தமாக உள்ளது. சில தினங்களுக்கு முன் ஒருவர் காவல் நிலையம் எதிரே தீக்குளித்து, தற்போது இறந்துவிட்ட சம்பவத்தால், கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையறிந்து நிலைமையைச் சமாளிக்க, காவல் நிலையத்தில் ஒரு பெண் காவலரை உள்ளே வைத்து பூட்டிவிட்டு தான் மற்ற ஆண் காவலர்கள் அனைவரும் இங்கு வந்துள்ளோம்.
அந்த நபர் இறந்த சம்பவத்தால் கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அசம்பாவிதம் ஏற்பட்டு விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையால் தான் காவல் நிலையத்திற்குப் பூட்டுப் போடும் நிலை ஏற்பட்டுள்ளது.
எங்கள் நிலை இப்படியிருக்கிறது. தலைமையோ அதுபற்றிக் கவலை கொள்ளாமல் இருக்கின்ற காவலர்களை 24 மணிநேரம் வேலை வாங்குவதோடு, இதுபோன்ற பூட்டுப் போடும் நிலைக்கும் எங்களைத் தள்ளிவிட்டு, பின்னர் அந்தக் காவல் நிலைய அதிகாரி முதல் காவலர்கள் என அனைவருக்கும் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் விநியோகிக்கும். அதற்கும் தலைமை மீது எந்தக் குறையும் கூறாமல், எங்கள் மீதே தவறு இருப்பதாக எழுதி நேர்ந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்கின்ற நிலைமையும் எங்களுக்குத் தான்" என நொந்து கொண்டார்.
காவல்துறை தலைமை கவனிக்குமா?