

பொதுமக்கள் தங்களிடமுள்ள பயன்படுத்தாத பொருட்களைக் கொடுத்து வேறு பொருட்களைக் குறைந்த விலைக்கு வாங்கிக்கொள்ளும் ‘ஸ்வாப் ஷாப்’ திட்டம் வரவேற்பைப் பெற்றுள்ளதால் அடுத்து வரும் பண்டிகை நாட்களிலும் விரிவுபடுத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
அடையாறு மண்டலம், பெசன்ட் நகர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு சமூகக் கூடத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலம் அமைக்கப்பட்டுள்ள மறுபயன்பாட்டிற்கு உகந்த தரமான பொருட்கள் சேரிப்பு மையத்தினை ஆணையர் பிரகாஷ், இன்று பார்வையிட்டார்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மறுபயன்பாடு செய்யும் நிலையில் உள்ள பொருட்களை பொதுமக்கள் மீண்டும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அடையாறு மண்டலத்தில் 12.01.2020 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 13.01.2020 (திங்கட்கிழமை) ஆகிய நாட்களில் ஸ்வாப் ஷாப் என்ற திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விற்பனையைக் குறைத்து மறுபயன்பாட்டு நிலையில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தி கழிவுகளைக் குறைக்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட இத்திட்டத்தின் இரண்டாம் நாளான இன்று வரை சுமார் 10,000 பேர் ஆர்வமுடன் கலந்துகொண்டு தங்களிடம் உள்ள 22,000 எண்ணிக்கையிலான மறுபயன்பாட்டிற்கு உகந்த பல்வேறு பொருட்களை வழங்கி, தங்களுக்குத் தேவையான பொருட்களைப் பெற்றுக் கொண்டனர்.
இந்த இரண்டு நாட்களில் துணி, புத்தகங்கள், தோல் பொருட்கள், சமையல் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் போன்ற மறுபயன்பாட்டிற்கு உகந்த சுமார் 15,000 எண்ணிக்கையிலான பொருட்கள் பொதுமக்களால் இம்மையங்களில் இருந்து வாங்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு ரூ.22,345 வருவாய் கிடைத்துள்ளது. இத்திட்டம் முற்றிலும் வியாபார நோக்கமற்றது. குறிப்பாக திடக்கழிவுகளைக் குறைத்து பாதுகாப்பான சுற்றுச்சூழலை ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம்.
இம்மையத்திற்கு வருகை புரிந்து மறுபயன்பாட்டிற்கு உகந்த பொருட்களை வழங்கிய பொதுமக்களுக்கு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை தன்னார்வலருக்கான அடையாள அட்டை ஆணையரால் வழங்கப்பட்டது.
மேலும், இத்திட்டத்திற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதால் இனிவரும் காலங்களிலும் முக்கியமான பண்டிகை தினங்களில் இதுபோன்ற ஸ்வாப் ஷாப் மற்றும் மறுபயன்பாட்டிற்கு உகந்த தரமான பொருட்கள் சேரிப்பு மையங்கள் அமைத்து பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் சென்னை மாநகராட்சியால் தொலைநோக்குப் பார்வையுடன் இது ஒரு சேவையாக செயல்படுத்தப்படும் என ஆணையர் பிரகாஷ், தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், தெற்கு வட்டார துணை ஆணையாளர் ஆல்பி ஜான் வர்கீஷ், மண்டல அலுவலர் திருமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.