

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் தைத்திருநாள் முதல் நாளான பொங்கல் அன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான மாடுபிடி வீரர்கள் முன்பதிவு பணிகள் இன்று (ஜன.13) காலை தொடங்கியது.
முன்னதாக, காலை 9 மணிக்கு முன்பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக நேற்று இரவு முதலே மாடுபிடி வீரர்கள் அவனியாபுரம் பிஎம்எஸ் பள்ளியில் குவியத் தொடங்கினர்.
மதுரை மாநகராட்சி சுகாதார நல அலுவலர் வினோத் ராஜா தலைமையில் 30 பேர் அடங்கிய மருத்துவர் குமுவினர் மாடு பிடி வீரர்களுக்கான உடற் பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜல்லிக்கட்டுப் போட்டியில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள வீரர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அதனால் வீரர்களின் ஆதார் அடிப்படையில் அவர்களின் வயது பரிசோதிக்கப்பட்டே டோக்கன் வழங்கப்படுகிறது. மேலும், மாடுபிடி வீரர்களின் எடை 50 கிலோவுக்கு குறையாமல் இருக்க வேண்டும் எனவும் விதிமுறை இருக்கிறது. எனவே, ரத்த அழுத்தம், உயரம். எடை பரிசோதனைக்கு பின் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.
மதுரை மாநகராட்சி சுகாதார நல அலுவலர் டாக்டர் வினோத் ராஜா தலைமையில் 30 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் முன்பதிவு டோக்கன் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலை 11 மணி நிலவரப்படி 610 மாடு பிடி வீரர்களுக்கான போக்கன் வழங்கப்பட்டு பரிசோதனை நடைபெறுகிறது. திருப்பரங்குன்றம் உதவி ஆணையர் ராமலிங்கம், அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பெத்துராஜ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.