Published : 13 Jan 2020 10:53 AM
Last Updated : 13 Jan 2020 10:53 AM

காகித முறை நடவில் சீரக சம்பா சாகுபடி- குறைந்த செலவில் நிறைவான மகசூலால் விவசாயி மகிழ்ச்சி

தஞ்சாவூர்

வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர் அருகே காகித முறை நடவில் பாரம்பரிய நெல்லான சீரக சம்பாவை குறைந்த செலவில் பயிரிட்டு, நிறைவான மகசூலை பெற்றுள்ளார் தஞ்சை விவசாயி.

தஞ்சாவூர் அருகே சடையார்கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மா.ராமலிங்கம்(58). இவர், தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பாரம்பரிய நெல் ரகங்களான சீரகசம்பா, மாப்பிள்ளை சம்பா, வெள்ளைப் பொன்னி ஆகிய 3 நெல் ரகங்களையும் ஒரு ஏக்கரில் பிரித்து காகித முறை நடவு முறையில் பயிரிட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அறுவடையான சீரக சம்பாவில் நிறைவாக மகசூல் கிடைத்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளார் ராமலிங்கம்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: எனது வயலில் ரசாயன உரங்களை பயன்படுத்தி பல்வேறு புதிய நெல் ரகங்களை பயிரிட்டு வந்தேன். மழை அதிகம் பெய்யும்போது, இந்த நெல் ரகங்களில் பூச்சித்தாக்குதல் ஏற்பட்டு, மகசூல் எதிர்பார்ப்பதைவிட குறைவாகவே கிடைத்து வந்தது. ஆனால், சாகுபடிக்கான செலவு அதிமாக இருந்தது.

இந்நிலையில் தான் காகித நடவு முறை குறித்து கேள்விபட்டு, மாரியம்மன்கோயிலைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை அணுகினேன். பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா, வெள்ளைப் பொன்னி ஆகிய விதை நெல்லை தலா ஒரு கிலோ வீதம் வாங்கி, அவற்றை காகிதத்தில் மடித்து நாடாபோல திரித்து ஒரு ஏக்கர் வயலில் பயிரிட்டேன். இந்த முறையில் வயலில் நடவு செய்ய ஏக்கருக்கு ரூ.4,500 செலவானது. நல்ல இடைவெளி விட்டு நெல் முளைத்ததால், அதிகம் தூர் கட்டியது. ஒரே ஒருமுறை மட் டுமே களை எடுத்தேன். இயற்கை உரம் ஒருமுறை தெளிக்கப்பட்டது.

இதில், சீரக சம்பா தூர் அதிகம் வெடித்து நெல்மணிகள் கூடுதலாக விளைந்திருந்தன. இதை நாங்களே கைகளால் அறுவடை செய்து, பழைய முறைப்படி கதிரடித்து நெல் தனியாக வைக்கோல் தனியாக பிரித்தோம். இதில், ஒரு மா (100 குழி)வுக்கு 8 மூட்டை மகசூல் கிடைத்துள்ளது. பாரம்பரிய நெல் சாகுபடிக்கு ஏக்கருக்கு 7 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவானது. இதுவே புதிய ரக நெல் சாகுபடி செய்திருந்தால் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவாகியிருக்கும். பாரம்பரிய நெல் சாகுபடியில் குறைந்த செலவில் நிறைவான மகசூல் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் 20 தினங்களில் மாப்பிள்ளை சம்பா, வெள்ளைப் பொன்னியையும் அறுவடை செய்ய உள்ளோம்.

இந்த பகுதியில் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள பல்வேறு நெல் ரகங்களின் நெற்பயிரில் புகையான் தாக்குதல், குலைநோய் தாக்குதல், ஆனைக் கொம்பன் நோய் தாக்குதல் ஆகியவை தென்பட்டாலும், பாரம் பரிய நெல்லை எந்த நோயும் அண்டவில்லை, இனி வரும் காலங் களில் பாரம்பரிய நெல்லையே பயிரிடுவேன். அதுதொடர்பாக விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x