

வால்பாறை தபால் நிலையத்தில் விரைவில் ரயில்வே முன்பதிவு மையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்து உள்ளது வால்பாறை. இப்பகுதி மக்கள் கூறியதாவது:
வால்பாறை நகரம் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பலர் தங்கள் சொந்த ஊருக்கு ரயிலில் செல்ல முன்பதிவு செய்யவும், தவிர்க்க இயலாத காரணங்களால் பயணத்தை கைவிடும் போது பயணச்சீட்டை ரத்து செய்யவும், வால்பாறையில் இருந்து 3 மணி நேரத்துக்கு மேல் பயணித்து பொள்ளாச்சிக்கும், உடுமலைக்கும் செல்ல வேண்டி உள்ளது.
ரயில் புறப்படும் 4 மணி நேரத்துக்கு முன்பு பயணிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு விடும். காத்திருக்கும் பட்டியலில் உள்ளவர்கள் ரயில் புறப்படும் அரை மணி நேரத்துக்கு முன்பு பயணச்சீட்டை ரத்து செய்தால் மட்டுமே படுக்கை வசதி கொண்ட பயணச்சீட்டில் ரூ.35 ம், குளிர்சாதன வசதி கொண்ட பயணச்சீட்டில் ரூ. 60-ம் பிடித்தம் செய்து கொண்டு மீதி தொகை பயணிகளுக்கு கிடைக்கும். ஆனால் வால்பாறையில் முன்பதிவு மையம் வசதி இல்லாததால் 4 மணி நேரம் பயணித்து பொள்ளாச்சி, உடுமலை ரயில்நிலையங்களில் உள்ள முன்பதிவு மையத்துக்கு காலதாமதமாக வந்து பயணச்சீட்டை ரத்து செய்வதால் முழுத்தொகையும் இழக்க நேரிடுகிறது.
இதனால் ரயில் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வால்பாறையில் ரயில்வே முன்பதிவு மையம் அமைக்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாக போராடி வருகிறோம். கடந்த மாதம் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் பொள்ளாச்சி ரயில்நிலையத்துக்கு ஆய்வுக்கு வந்தபோது சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் வால்பாறையில் முன்பதிவு மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து மனு அளித்து இருந்தோம் ஆனால் இதுவரை அந்த மனு மீது நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.
இது குறித்து தெற்கு ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் ய.நடராஜ் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘வால்பாறையில் ரயில்வே முன்பதிவு மையம் அமைக்க தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம் வைக்கப்பட்ட கோரிக்கை மனு மனு தற்போது துணை முதுநிலை வணிக மேலாளரின் (பயணிகள் சந்தைப்படுத்தல்) நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது. வால்பாறை தபால்நிலையத்தில் ரயில்வே முன்பதிவு மையம் விரைவில் திறக்கப்படும்’ என்றார். எஸ்.கோபு